நம் பற்கள் எப்போதும் துகுதுகுவென வெண்மையாக இருக்க வேண்டும் என்று பல வெளிநாட்டு பற்பசை நிறுவனங்கள் விளம்பரம் செய்து வந்ததால் நம்ம ஊரில் பெரியவர்கள் கையில் இருந்த வெற்றிலைப் பெட்டிகள் எல்லாம் மறைந்து இன்று மாத்திரை பெட்டிகளாக இருக்கிறது.
நம் பற்கள் பார்க்க வெண்மையாக இருந்தால் தான் சமூகம் மதிக்கும் எனும் அளவிற்கு விளம்பரம் செய்து செய்து மனதை மாற்றி பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் பொருட்களை இறக்கி வியாபாரம் செய்து வந்தனர் வருகின்றனர் என்பதே இன்றைய உண்மையான நிலை.
அது மட்டுமில்லாமல் வெற்றிலை போடுவதால் தான் பலவிதமான நோய்கள் எல்லாம் ஏற்படுகிறது என்று சொல்லி அந்த பழக்கத்தை நம் கலாச்சாரத்திலிருந்து மறக்கடிக்க இன்னும் முயற்சிகள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.
முன்பெல்லாம் ஏதேனும் விருந்து என்றாலே, சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை, பாக்கு தான் கொடுப்பார்கள். ஆனால், இன்றெல்லாம் நிலைமை அப்படியா இருக்கிறது. கல்யாணம், காதுகுத்து என்று எங்கு விருந்துக்கு போனாலும் சாப்பிட்டு முடித்ததும் கொடுப்பது ஐஸ்கிரீமும், பதப்படுத்தப்பட்ட கூல்ட்ரிங்க்ஸும் தான்.
நம் கைகளில் இருந்த வெற்றிலை பெட்டிகள் மறைந்ததன் விளைவு தான் இன்று நன்கு சாப்பிட்டதும் ஜீரணமாக ஜெலுசில், ஈனோ என்று அதில் என்னென்ன பொருட்கள் எல்லாம் இருக்கிறது என்று தெரியாமலே குடித்து வருகிறோம்.
அட அப்படி அந்த வெற்றிலை என்னதான் இருக்கு என்றுதானே கேட்கிறீர்கள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலின் பின்னும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் என்று நாம் தினமும் எங்கோ ஏதோ ஓர் பதிவில் படித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் பயன்படுத்தினோமா என்றால் அதற்கான விடை கேள்விக்குறி தான்!
முதுமையில் உடலில் ஏற்படக்கூடிய பல குறைபாடுகளுக்கும் வியாதிகளுக்கு வெற்றிலை தான் நிவாரணம் என்பதால் வயதான பெரியவர்கள் அதை தங்கள் கைகளிலேயே வைத்துக்கொண்டு அவ்வப்போது வெற்றிலைப் போட்டுக்கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் செரிமான செயல்முறை சீராக நடக்க உடலுக்கு வெற்றிலை உதவியாக இருக்கும்.
பொதுவாக வெற்றிலையில மூன்று வகைகள் இருக்கு. சாதாரண வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை.
வெற்றிலைச் சாறுடன் (15 மி.லி) இஞ்சிச் சாறு (15 மி.லி) சேர்த்து கொடுத்து வர நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் வெற்றிலைச்சாற்றோடு சிறிதளவு சுண்ணாம்பு கலந்து (சுண்ணாம்பின் அளவு அதிகமானால் எரிச்சல் உண்டாகும்) குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல்) தொண்டக் குழியில் பட கொடுத்தால் இருமல், சுவாசப் பிரச்சனைகள் நீங்கும்.
தீயால் ஏற்பட்ட புண் மேல் வெற்றிலைய வைத்துக்கட்டினால் புண் அழற்சி குறையும். தலை வலி, மூட்டு வலி இருக்கும்போது வெற்றிலைச் சாறு தடவினால் வலி நீங்கும்.
வெற்றிலையை நல்லெண்ணெயில் நனைத்து தீயில் வாட்டி மார்பின் மீது போட்டால் 6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல், மூச்சு முட்டல், சுவாசப் பிரச்சினை ஆகியவைத் தீரும்.
புதிதாக தாயான பெண்களுக்கு பால் சுரக்கவும், பால் கட்டிக்கொண்டால் உண்டாகும் மார்பக வீக்கத்தைக் கரைக்கவும் வெற்றிலையை தணலில் காட்டி வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்ட பால் கட்டு குணமடையும்.
இவ்வளவு எல்லாம் நன்மைகள் கொண்ட வெற்றிலையின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? நாம் வெற்றிலை சாப்பிடலாம் என்று நினைத்தாலும், நகர்ப்புறங்களிலும் ஏன் பல கிராமங்களிலும் கூட வெற்றிலை கிடைப்பதில்லை. எனவே நாம் அதிகம் வெற்றிலை அதிகம் வாங்கினால் தான் அதற்கான தேவை உண்டாகும், அப்போதுதான் வெற்றிலை அதிகம் விளைவிக்கும்படும்.