நமது குருகுல கல்வி நமக்கு கற்று தந்த பாடங்கள்

ல்வி என்பது அறிவைப் புகட்டுவதற்காக மட்டுமல்லாமல், ஒரு மனிதனுக்கு உயரிய பண்புகளை போதித்து, அவனை மேன்மையான மனிதனாகச் செய்வதே கல்வியின் உண்மையான நோக்கம். அத்தகைய கல்விமுறைதான் அன்றைய குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. குருகுலத்தில் கற்பவர்கள் எப்போதும் தவறான வழிக்குச் செல்ல மாட்டார்கள்; மற்றவர்களின் மனம் புண்படும்படிப் பேச மாட்டார்கள்; அநாகரிகமாக நடந்துகொள்ளவும் மாட்டார்கள். நம் நாட்டில் ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன்பு பெரும்பாலும் குருகுலக் கல்விமுறையே இருந்து வந்தது. அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த குருகுலக் கல்வியின் மேன்மை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

கல்வியின் நோக்கம் மேன்மைமிக்க மக்களை உருவாக்குவதே. குரு வசிக்கும் இடத்தில் மாணவன் சென்று தங்கி கல்வி கற்பான். குருவும் தனிக்கவனம் செலுத்தி மாணவனுக்குக் கல்வியை போதிப்பார். குருவிடம் கல்வியை மட்டுமன்றி நல்ல நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும், எளிமையையும் மாணவன் கற்பான். குருகுலவாசத்தைப் பொறுத்த அளவில், மதிப்பெண்ணுக்கு இடமே இல்லை. அங்கு எல்லோருமே ஒரேவிதமான கல்வியையும் வித்தைகளையும் கற்று வந்தனர். ஒருவர் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுவிட்டாலும்கூட, அனைவரும் முழுமையாகத் தேர்ச்சி பெறும் வரை, அனைவரும் முழுமையான ஞானம் பெறும்வரை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கப்பட்டது. குருகுலத்தில் அரசர் மகனும் ஒன்றுதான், சாதாரணக் குடிமகனின் பிள்ளையும் ஒன்றுதான். எந்தவித பொருளாதார பேதமும் இல்லாமல் அங்கு கல்வி கற்றுத்தரப்பட்டது. பொருளாதார பேதங்கள் இருக்கக் கூடாது என்பதால்தான் அன்றைய குருகுலங்கள் வனப் பகுதிகளில் அமைந்திருந்தன. கோகுலத்து இளவரசன் கிருஷ்ணரும், ஏழை மாணவன் குசேலரும் சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றதை நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? ஆக, குருகுலத்தில் எந்தவித பேதமும் இல்லாமல்தான் கல்விமுறை அளிக்கப்பட்டது என நமது புராணங்கள் கூறுகின்றன. ராமபிரானும் தனது சகோதரர்களுடன் தங்கி இருந்து எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தே கல்வி பயின்றார் என ராமாயணம் கூறுகிறது.

இப்படியாக ஒவ்வொருவருக்கான வியாபாரம், தொழில், சிறப்பான வாழ்க்கைக்கான உபதேசங்கள், வேதகல்வி என்று அனைத்தையும் குருகுலக்கல்வியில் சொல்லித் தந்தார்கள். இதற்குத்தான் உபநயன ஸம்ஸ்காரம் என்று பெயர். அதுபோலவே காலமாற்றத்தை உணர்ந்து கற்பிக்கப்படும் கல்வியே சிறந்தது. இதைத்தான்

“ஸ்வர்ண புஷ்பாம் ப்ரதிவீம்

சின்வந்தி புருஷா: த்ரய:

சூரஸ்ய க்ருதவித்யஸ்ய

யஸ்ய ஜானாதி சேவிதம்”

என்கிறது ஒரு ஸ்லோகம். ‘எந்த கல்வியைக் கற்றுக்கொண்டால், கால மாறுபாட்டிலும் அது உதவுகிறதோ, அந்தக் கல்வியைக் கற்றுக்கொள்’ என்றார்கள். காலமாறுதலுக்கு ஏற்ப கல்வியை அன்றே அளித்தது குருகுலம்.

குறையே இல்லாத கல்வியை வழங்கியவர் குரு. ‘உப’ என்றால் ஆசிரியரிடம், ‘நயனம்’ என்றால் கொண்டுவிடுதல், ஆசிரியரின் அருகே கொண்டு விடுதல்தான் உபநயனம் என்ற சடங்காக மாறிவிட்டது. குருவிடம் கொண்டுபோய் விடுவதற்கு முன்னர் அந்த மாணவருக்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. கற்றுக்கொள்பவனுக்கு முதலில் விநயம் அதாவது பணிவு இருக்க வேண்டும். சுகங்களை விட்டுவிட வேண்டும். உடலின் சுகத்தில் முதலாவதான தூக்கத்தை மாணவன் விட்டுவிட வேண்டும். அதிகம் தூங்குபவன் கற்க முடியாது. குரு எந்த நேரத்திலும் கற்றுத்தரத் தயாராக இருப்பார். மாணவனும் அப்படியே தயாராக இருத்தல் வேண்டும். உபநயன ஸம்ஸ்கார முறைப்படி உண்ணும் உணவு முதல் அனைத்தையும் சுகிக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் கல்வியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கற்க வேண்டும். மனத்தூய்மையொடு, எண்ணத்தால், சொல்லால், செயலால் எவரையும் காயப்படுத்தாத கல்வியே குருகுலக்கல்வி முறை.

ஏடுகளை வாசித்துப் பயில்வதைவிடவும் குருவிடம் நேரடியாகப் பயில்வதே சிறப்பானது என்பதால் குருகுல மாணவர்கள் எல்லாவகையிலும் சிறந்து விளங்கினார்கள். எதையும் ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என காளிதாசர் தனது ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். குருகுலக்கல்வியில் மனது மட்டுமல்ல, கற்பதற்கான உடலையும் சூழலையும்கூட அற்புதமாக உருவாக்கினார்கள். குருவின் போதனைகள் மூலம் தீய எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்களை வளர்க்க அந்தச் சூழல்களே உதவின. எல்லா உறவுகளையும், செல்வங்களையும் துறந்து குருவே சகலமும் என்ற சூழலில் மாணவனின் மனது குருவிடம் ஒன்றியது. ராமாயணத்தை ஒருவிதமாகவும், கீதையை ஒருவிதமாகவும் அதன் ஆழமான அர்த்தங்களோடு சொல்லித்தர நல்ல குருவால் மட்டுமே முடியும். ‘ராமன் செய்ததை எல்லாம் செய், கிருஷ்ணர் சொன்னதை எல்லாம் செய். ஆனால் கிருஷ்ணர் செய்ததைச் செய்யாதே’ என்று பகுத்துக் கற்றுத்தந்தது எல்லாம் குருகுலத்தில்தான். அதைவிட முக்கியமாக ஏட்டுச்சுவடிகள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில் ஞானக்கருத்துகளைச் சேமிக்கும் இடமாக மாணவர்களின் மூளையே இருந்து வந்தது. அதனால் மனப்பாடம் முக்கியமாக இருந்து வந்தது. சகல பாடங்களையும் ஒரு மாணவன் தனது நினைவிலேயே வைத்து இருந்தான். இதனால் குருகுல மாணவர்களின் சிந்தனைத்திறன், செயல்திறன் யாவும் அற்புதமாக இருந்தன.

நம்முடைய பழங்கால குருகுலக் கல்விமுறை மனிதர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. பக்குவப்பட்ட, ஆசைகளை கட்டுப்படுத்தத் தெரிந்த தரமான மக்களையே நமது பண்டைய கல்வி முறை உருவாக்கித் தந்தது. நம் குருகுலக்கல்வி முறையில் அகங்காரத்துக்கு இடமில்லை. குருகுலத்தில் பயில்பவர் மற்றெல்லோருக்கும் வழிகாட்டியாகவே இருப்பார்கள். உள்ளத்தின் உயர்வுக்கு வழிவகுப்பது உபநயன சம்ஸ்காரம் எனப்படும் குருகுலக்கல்வி முறை. அங்கு பயில்பவர்கள் பொறுமையும் கனிவும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதுவே குருகுலக்கல்வி முறையின் சிறப்பு.’’

ஆக, தற்போது கல்வி என்பதே வியாபாரமாக ஆகிப் போய் விட்ட நிலையில், மீண்டும் குருகுலக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப் பட்டால் தான், குறைந்தது இந்தியர்களான எமது பிள்ளைகள் நன்நடத்தை பயின்று நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள். இவற்றை எமது தாய்நாட்டு அரசாங்கங்கள் உணர்ந்து செயற்படுவது அவசியம். ஆனால் அரசியலால் சீரழிந்து போயுள்ள எமது நாடுகளின் அரசாங்கங்கள் தமது மற்றைய கடமைகளையே சிறப்பாகச் செய்து முடிக்க முடியாமல் இருக்கும் போது அவர்கள் இதை நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனாலும் எமது நாடுகளில் இன்றும் பணபலம் கொண்ட தனிப்பட்ட சிலர் இம்முறையை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.