ஆன்ட்டிபயாட்டிக் இல்லாத தேன் வகையைத் திட்டவட்டமாகக் கண்டறிவது கடினம்தான். அதேநேரம் பசுமை அங்காடிகளில் கிடைக்கும், செயற்கை பதப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படாத தேன் வகைகளை வாங்குவது நல்லது.
தேனின் தரத்தைக் கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற சோதனை: ஒரு பிளாட்டிங் பேப்பரில் இரண்டு துளி தேனை விட்டுப் பார்ப்பது. தண்ணீரை உறிஞ்சக்கூடிய எந்தக் காகிதத்திலும் தேனை விட்டுப் பார்க்கலாம். அப்படிச் செய்யும்போது தேன் அப்படியே இருந்தால் நல்ல தேன், காகிதத்தால் உறிஞ்சப்பட்டால் கலப்படத் தேன்.
அதேபோலக் கண்ணாடிக் குவளை ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேனை மேலிருந்து ஊற்றினால், அது ஒரு கம்பியைப் போலக் கீழே இறங்கி அடிப்பகுதியைத் தொட வேண்டும். மாறாக, இடையிலேயே கரைய ஆரம்பித்தால், அது கலப்படத் தேன்.
தேனில் மூன்று வகைகள் உள்ளன: முதலாவது கொம்புத் தேன். பாறைகள், மரங்களில், அதாவது வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்தத் தேனீ வகை. அதிலிருந்து குடம்குடமாக தேன் கிடைக்கும். இரண்டாவது பொந்துத் தேன். குகை, மரப்பொந்து போன்ற இருட்டான இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது. இதைத்தான் பெட்டிகளில் வளர்க்கிறார்கள்.
இந்தத் தேன் வகை மிதமான அளவு கிடைக்கும். மூன்றாவதாகக் கொசுத் தேன் என்ற சிறிய தேனீ வகை உண்டு. இந்தத் தேன் கிடைப்பது கஷ்டம். ஆனால், இதில்தான் மருத்துவ மதிப்பு அதிகம்.
தேனை எப்படி எடுத்தாலும், அதில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற வேண்டும். அப்போதுதான் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இதற்கு வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். ஆனால், அப்படி இயற்கையாகப் பதப்படுத்துவதற்கான காலம் அதிகமாகும் என்பதால், தேனைச் சூடுபடுத்தி விடுகிறார்கள். இப்படிச் செய்யும்போது தேனின் இயல்புத்தன்மை மாறிவிடுகிறது.
அது மட்டுமல்லாமல் தேனைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள் தேனைப் பதனப்படுத்தி விடுகிறார்கள் (pasteurisation). இந்தச் செயல்முறையில் தேனின் இயற்கையான சத்துகள் மாற்றத்துக்கு உள்ளாகாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. வணிகரீதியான தேனை வாங்கும்போது, இந்த அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொல்லிமலையும்…கொம்புத் தேனும்…
கொல்லி என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு ஏதோபோல் இருக்கும். கொல்லிப்பாவை என்பவள் இம் மலையில் காவல் தெய்வமாக விளங்குவதால், கொல்லிமலை என்ற பெயர் உருவானது.
தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் லட்சக்கணக்கானோர் சென்றிருக்கலாம். ஆனால், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையோ சில நூறுகள்தான்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,300 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கொல்லிமலைப் பகுதியானது 280 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
அடிவாரப் பகுதியான காரவள்ளியில் இருந்து 73 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றால்தான் கொல்லிமலையின் தலைப்பகுதியான செம்மேட்டை அடைய முடியும். இங்கு, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். மா, பலா, வாழை, அன்னாசி, மரவள்ளி, மிளகு, காஃபி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.
வெளி மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசில்லா அருவியில் குளித்து மகிழ்வர். இவைதான் கொல்லிமலைக்கான சிறப்பு.
மற்றொரு சிறப்பு கொம்பு தேன்
கொல்லிமலையையும், கொம்புத் தேனையும் பிரிக்க முடியாது. கொல்லிமலை என்றதும் நினைவுக்கு வருவது தேன்.
எவ்வாறு நெல்லைக்கு அல்வா, திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம் போல், கொல்லிமலைக்கு தேன் பெயர் பெற்றது. தேனில் மூன்று வகை உண்டு. கொம்புத் தேன், அடுக்குத் தேன் எனும் பெட்டித் தேன், பெருந்தேன். இதில், கொம்புத் தேன் என்பது மரங்கள் மட்டுமின்றி, சாதாரண செடிகளிலும் கூட தேனீக்கள் கூடு கட்டியிருக்கும்.
ஒரு மாம்பழம் வடிவில் மட்டுமே இருக்கும் இதன் சுவை அதிகம். இவை கிடைப்பது மிக மிக அரிது. குறிப்பாக, அதில் இருந்து 200 மில்லி தேன் மட்டுமே எடுக்க முடியும். ராணி தேனீக்கள்தான் இவ் வகையான கொம்புத் தேனை உருவாக்கும்.
இதேபோல், அடுக்குத் தேன் என்பது பெட்டிகளில் வைத்து வளர்க்கப்படுவது, மரங்கள் மற்றும் உயர்ந்த பாறைகள் உள்ளிட்டவற்றில் கூடு கட்டியிருக்கும். இவற்றில் 100 தேனீக்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு மனித உயிரையே கொல்லும் வேகம் கொண்டவை.
இவ் வகை தேனிலும் ருசி அதிகமாக இருக்கும். இவற்றை எடுத்துத்தான் பலர் விற்பனை செய்கின்றனர். அடுத்து பெருந்தேன். இவையும் உயர்ந்த கட்டடங்கள், பாறைகளின் இடுக்குகளில் காற்று புகாதவாறு கூடு கட்டியிருக்கும்.
இந்த தேன்களும் அதிகம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அசல் கொல்லிமலைத் தேனை ஒரு சிலர் மட்டுமே விற்பனை செய்கின்றனர். பலர் கலப்படம் செய்து விற்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 30, 40 ஆண்டுகளுக்கு முன் உயிரைத் துச்சமாகக் கருதி தேனை எடுத்து வந்தோர் உண்டு. ஆனால், தற்போது யாரும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கொல்லிமலைத் தேன் கிடைப்பது அரிதாகவே உள்ளது.
இவை அதிகளவில் பயன்பாட்டுக்குக் கிடைக்கும்பட்சத்தில், கொல்லிமலை தேனுக்கென புவிசார் குறியீடு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொம்பு தேன், அடுக்குத் தேன், பெருந்தேன் இவை அனைத்தும் ஒரு லிட்டர் ரு. 1,500-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பழங்குடியின மலையாளிகள் நலச் சங்க மாநில தலைவர் குப்புசாமி கூறியது:
கொல்லிமலை தேன் என்பது பிரசித்தி பெற்றதுதான். ஆனால், அவை கிடைப்பது தற்போது அரிதான ஒன்றாக உள்ளது. கொம்புத் தேன், அடுக்குத் தேன், பெருந்தேன் இவை தான் தேனின் வகைகள். முதல் வகையான, கொம்புத் தேன் எளிதாகக் கிடைத்து விடாது.
இவை சிறிய செடியிலும் இருக்கும், உயர்ந்த மரத்திலும் இருக்கும். அவற்றை கண்டுபிடிப்பதே சவாலானதாக இருக்கும். ஒரு மாம்பழம் வடிவில் உள்ள அந்த தேன் அடையை இறுகப் பிழிந்தால் 200 மில்லி தேன் கிடைக்கும். கொல்லிமலை மூலிகை வனமாக இருப்பதால், பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி எடுத்துச் செல்லும் தேனீக்கள் அதை சேகரித்து வைக்கின்றன. அதன் மூலம் நமக்குக் கிடைப்பதுதான் ருசியான தேன். தற்போது ஒரு லிட்டர் ரூ. 1,800 வரை விற்பனையாகிறது.
இரண்டாம் வகை, அடுக்குத் தேன் என்றும் அழைக்கலாம், பெட்டித் தேன் என்றும் அழைக்கலாம். தேனீக்களை பெட்டியில் அடைத்து வளர்ப்பர். இவையும் மரங்களில் கூடாகக் கட்டியிருக்கும். இந்த தேனீக்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அவ்வளவுதான் மனிதர்கள் எளிதில் தப்ப முடியாது. இந்த தேன் ஒரு லிட்டர் ரூ. 1,500 வரை விற்கப்படுகிறது.
மூன்றாம் வகை தேன் பெருந்தேன். உயர்ந்த கட்டடங்கள், பாறைகள், காற்றுப் புகாத இடங்களில் இவை கூடு கட்டியிருக்கும். இந்த வகை தேன் எளிதாகக் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 700 வரையில் இருக்கும். கொல்லிமலையில் உள்ள விவசாயிகளில் ஒரு சிலர் தான் தேனீ வளர்ப்பு மற்றும் விற்பனைத் தொழிலைச் செய்து வருகின்றனர்.
தேனில் கருப்பட்டிப்பாகு கலப்படமும் அதிகரித்து விட்டதால், மக்களும் எளிதில் நம்பி வாங்குவதில்லை. இதனாலும் கொல்லிமலை தேனுக்குரிய மதிப்புக் குறைந்து விட்டது. தேனீ வளர்ப்புத் தொழிலை மாவட்ட நிர்வாகம் ஊக்குவிக்க வேண்டும்.
தமிழகத்தில் ருசியான, தரமான தேன் கிடைப்பது என்றால் அது கொல்லிமலைதான் என்ற அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும். தேன் எடுப்பதற்கென இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். கொல்லிமலை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் தேன் விற்பனையை அதிகப்படுத்தினால், மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அவர்களது வாழ்வாதாரமும் சிறக்கும் என்றார்.