நமது வாழ்க்கை என்பது எப்போதும் இயற்கையை சார்ந்து தான் இருக்கிறது. ஆனால் நாம் இதனை கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் இயற்கையை சீர்குலைக்கும் பல விஷயங்களை செய்து வருகிறோம். அதில் ஒன்று தான் இரசாயனங்கள் கலந்த விவசாயம். இதனால் மண் பாதிப்படைவதோடு மட்டும் அல்லாமல் நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம். இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் கைக்குத்தல் அரிசியில் இல்லாத சத்துக்கள் வேறு எந்த அரிசியிலும் பார்க்க முடியாது. இந்த விஷயங்களை இக்கால தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் தினமும் ஒரு பாரம்பரிய அரிசி வகை குறித்து பார்த்து வருகிறோம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் நெல் தூயமல்லி ஆகும். என்னடா பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா…?
இதற்கு இப்படி ஒரு பெயர் கிடைக்க ஒரு காரணம் உண்டு. அது என்ன என்பதையும், இந்த அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…
பெயர்க் காரணம்:
இந்த நெல்லில் கதிர் வரும் அந்த சமயத்தில் பார்ப்பதற்கு ஏதோ மல்லிகை மொட்டு போலவே இருக்குமாம். அதன் காரணமாகவே இது தூயமல்லி என்று அழைக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் யோசித்துள்ளார்கள் என்று பாருங்கள். இது தமிழர்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய அரிசிகளில் ஒன்று. இதனை வளர்ப்பதற்கு பூச்சிகொல்லி எதுவும் தேவையில்லை.
ஏனெனில் இதற்கு பூச்சிகளின் தாக்குதல்களை தாங்கி வளரக்கூடிய தன்மை உள்ளது. தூயமல்லி நெல் நூற்றி முப்பது முதல் நூற்றி நாற்பது வரை வயதுடையது. இந்த அரிசி மணிகள் மிகவும் வெண்மையாக பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும். நம் முன்னோர்கள் பின்பற்றிய அதே முறையில் பல இடங்களில் இந்த அரிசி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டம் கல்பகனுர் கிராமத்தில் தூயமல்லி நெல் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. “உணவே மருந்து, மருந்தே உணவு” என்று நம் முன்னோர்கள் கூறிய கூற்றிற்கு சரியான உதாரணம் இந்த தூயமல்லி அரிசி. இந்த அரிசியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த அரிசியை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தூயமல்லி அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்:
*நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
*இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
*எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய அரிசி வகை இது என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை சமைத்து சாப்பிடலாம்.
*சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
*உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது.
*உள் உறுப்புகளை வலுவடைய செய்து அவற்றின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்கிறது.