‘பசி என்றால் பசி. ஆனால் கத்தியாலும் முட்கரண்டியாலும் சமைத்த இறைச்சியை சாப்பிட்டு திருப்தி அடையும் பசியானது, கைகள், நகங்கள் மற்றும் பற்களின் உதவியுடன் பச்சையான இறைச்சியை விழுங்கும் பசியிலிருந்து வேறுபடுகிறது’ என்று கார்ல் மார்க்ஸ் கூறினார். இதன் மூலம் இருவேறு பசியை வேறுபடுத்துகிறார். பசிக்காக உணவு என்ற நிலைமாறி, உணவுக்காக பசி என்று மாற்றப்பட்டிருக்கிறது. பசி என்பது மனித இனத்தின் நீண்ட காலப் பிரச்சினையாகும். இன்றைய நிலைமையில் பசி என்பது முதலாளித்துவத்தின் அடிப்படையான பிரச்சினையாக மாறியது. எனவே உணவுப் பொருட்கள் தொழில்முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை பண்டங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. தேவைக்காக உற்பத்திச் செய்யபட்ட உணவு, சந்தைக்கான உற்பத்தியாக மாறியது குறித்தும், அதனால் பெரும்பான்மை மக்கள் உணவின்றி பட்டினியால் சாகும் அவலநிலைக்கு ஆளாயிருப்பது குறித்தும் இக்கட்டுரை விவாதிக்கிறது.
மனித தேவையும் உழைப்பும்
உணவு, நீர், தங்குமிடம், உடை, வாழ்க்கை முறைகள் போன்ற வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு மனித இருப்பு முதன்மையான ஆதாரமாகும்; மேலும் அனைத்து உழைப்பும் முதலில் உணவு ஒதுக்கீடு மற்றும் உற்பத்தியை நோக்கியதாகும் என்றார் மார்க்ஸ். இதற்காக, மனிதன் தனது உடலுறுப்புகளைப் பயன்படுத்துகிறான். முக்கியமாக மூளை, கைகள், பேச்சுறுப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்துகிறான். இவற்றை செயல்படுத்தும்போது விளையும் ஆற்றல்தான் உழைப்பு. இந்தச் செயல்பாட்டில் இயற்கையும் மனிதனும் பங்கு பெறுகின்றனர். எனவேதான், மனிதன் உழைப்பு என்னும் ஆற்றலால் இயற்கைமீது தனது செயலைத் துவக்கி, இயற்கையைக் கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான் என்று எங்கல்ஸ் கூறினார்.
உணவு சங்கிலி (food chain)
விவசாய உற்பத்திக்கு நிலம்தான் முதன்மையான ஆதாரம். ஆரம்பத்தில், உணவு உற்பத்தி பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்து நடைபெற்றது. நிலத்தைப் பண்படுத்துவது, விதையை விதைப்பது, பயிரை வளர்ப்பது, களையை யெடுப்பது, உரத்தி இடுவது, பூச்சிகொல்லித் தெளிப்பது, அறுவடைச் செய்வது, சந்தையை நாடுவது, நுகர்வோரைச் சென்று சேர்வது, உணவு சமைப்பது, உண்ணுவது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் உணவு உற்பத்தியின் தொடர் நடவடிக்கைகளாகும். உணவு விளைவிக்கும் நிலத்திலிருந்து சாப்பிடும் தட்டு வரையிலும் நடைபெறும் நிகழ்வுமுறைகளின் தொடர்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் உணவுச் சங்கிலி என்கிறோம். இயற்கையாக நடைபெற்ற உணவு உற்பத்தி தற்போது தொழில்மயமாக்கப் பட்டுள்ளது. உணவை நுகர்வோரின் கலாச்சாரமும் மாறியிருக்கிறது. உற்பத்திக்கும், நுகர்வுக்கும் ஆன உறவு சிக்கலாகிவிட்டது. உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு இடையிலான பிளவு அதிகரித்துள்ளது.. எப்போது உணவு உற்பத்தி தொழில்முறையில் ஆனதாக மாறியதோ, உணவு எப்போது சரக்காக மாறியதோ அப்போதே உணவுச் சங்கிலி அறுபட்டுப் போனது.
காலநிலை மற்றும் உணவு சாகுபடி, மண்ணின் வேதியியல், தொழில்துறை விவசாயம், கால்நடை நிலைமைகள், உணவு உற்பத்தி மற்றும் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்கள், உணவுப் பொருட்களில் நச்சு சேர்க்கைகள், உணவு பாதுகாப்பு போன்றவை யாவும் விவசாயத்தில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியின் நேரடி விளைவுகளாகும். அதுவரை பேணப்பட்டு வந்த உணவுச் சங்கிலித் தொடர் அறுபட்டது. இதனால், தற்கால சமுதாயத்தில் உணவு மலிவான தன்மையைப் பெற்றிருக்கிறது. மேலும் பகுத்தறிவுக்கு பொருத்தமில்லான நுகர்வின் வடிவங்கள் பெருகியுள்ளன.
விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் உணவுச் சங்கிலித் தொடரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையான முறையில் செய்துகொண்டிருந்த விவசாயத்தில் முதலாளித்துவம் என்னென்ன மாற்றங்களை உருவாக்கின என்பதை இனி காண்போம்.
விவசாயத்தின் புதிய ஆட்சி (new regime of farming)
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனில் ஏற்பட்ட உணவு உற்பத்தியில் உருவான புதிய மாற்றங்களைப் பற்றி மார்க்ஸ் பகுப்பாய்வுச் செய்தார். முதலில் விவசாயத்தில் உருவான ஆரம்பகால பொருளாதார முன்னேற்றங்களை அவர் மறுக்கவில்லை. அதாவது ‘புதிய உணவு முறைகள் மற்றும் பசுமை பயிர்களை செயற்கையாக வளர்ப்பது, இயந்திரத்தை அறிமுகப்படுத்துதல், களிமண் மண்ணை புதிய முறையில் பண்படுத்துவது, கனிம உரங்களின் பயன்பாடு, நீராவி-இயந்திரத்தினை ஈடுபடுத்தியது, அனைத்து வகையான புதிய இயந்திரங்கள் ஆகியவை பிரிட்டானிய விவசாயத்திற்கு ஒரு புதிய வளர்ச்சியைக் கொடுத்தது. பொதுவாக அதி தீவிரமான சாகுபடி அனைத்தும் இந்த சகாப்தத்தின் சிறப்பியல்பு…. மண்ணின் உண்மையான உற்பத்தி வருவாய் வேகமாக உயர்ந்தது. ஒரு ஏக்கருக்கு அதிக மூலதன செலவினம், அதன் விளைவாக பண்ணைகளின் விரைவான அளவில் குவிந்திருப்பது ஆகியவை புதிய முறையின் அத்தியாவசிய நிலைமைகளாகும்’ என உயர் விவசாயத்தில் ஏற்பட்ட ஆரம்ப பொருளாதார முன்னேற்றங்களை மார்க்ஸ் விவரிக்கிறார்.
பின்னர், விவசாயத்தில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. உரங்கள் பயன்படுத்தப்பட்டன. பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்பட்டன. விவசாய உற்பத்தியில் வளர்ச்சி என்ற பெயரில் உற்பத்தி இடுபொருட்களிலும் கருவிகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால், நிலத்தில் இருந்த சத்துக்கள் அழிக்கப்பட்டன. எனவேதான், விவசாயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக இருந்தாலும், ஒரு பகுத்தறிவுள்ள வேளாண்மை முதலாளித்துவ அமைப்புடன் பொருந்தாது என்றார் மார்க்ஸ்.
இயற்கையான செயல்முறையை கொண்டிருந்த உணவு உற்பத்தி, தொழிற்சாலைச் சார்ந்த தயாரிப்பு செயல்முறையாக மாறியிருப்பதைதான் மார்க்ஸ் விவசாய உற்பத்தியின் புதிய ஆட்சி (new regime of high farming)என்று கூறுகிறார்.
மேற்குறிப்பிட்ட புதிய முறையின் விளைவு தானிய உற்பத்தி, இறைச்சிக்கான உற்பத்தியாக மாறியதாகும். உணவுப் பொருள் உற்பத்திக்கு பதிலாக இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால், மேய்ச்சல் மற்றும் தீவனப் பயிர்களின் உற்பத்தி அதிகரித்தது. கால்நடைகளின் இனப்பெருக்கம், மருத்துவ சிகிச்சை முறை, இன்ன பிற விசயங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாக மார்க்ஸ் கூறினார்.
இத்தகைய மாற்றங்களின் காரணமாக தானியத்தை உணவாகக் கொண்டிருந்த உழைக்கின்ற மக்கள், பெரும்பாலும் ரொட்டியை உண்டு வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்களுக்கு இறைச்சியும் பால்பொருட்களும் எட்டா கனியாக மாறின. ஆனால் இவை உயர் வகுப்பினருக்கான உணவாக மாறியது. விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் மொத்த விளைவாக, ஒரு புறம் உணவுப் பொருட்கள் உபரியாக குவிந்துக் கிடக்கிறது. மறுபுறம், உழைக்கின்ற மக்கள் பட்டினியால் மாண்டு கொண்டிருக்கின்றனர். இந்த அராஜகதனமான உற்பத்திமுறை, உணவுக்கும் பட்டினிக்கும் இடையே முரண்பாட்டைத் தோற்றுவித்தது. வேளாண்மையில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியினால், உண்வுப் பொருட்களின் உற்பத்தி அபரிமிதமாக இருந்தாலும், உழைக்கின்ற மக்களுக்கு உணவும் கிடைப்பதில்லை, ஊட்டச் சத்தும் கிடைப்பதில்லை. இது குறித்த மார்க்சின் ஆய்வுகளை இனிப் பார்க்கப் போகிறோம்.
தொழிலாளர்களின் உணவும் ஊட்டச் சத்தும்
முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் உணவு எவ்வாறு உற்பத்திச் செய்யப்படுகிறது என்பதையும், எவ்வாறு விநியோகம் செய்யப்படுகிறது என்பதையும், எந்த வகையில் நுகர்வு செய்யப்படுகிறது என்பதையும் மார்க்ஸ் ஆய்வு செய்து வந்தார். உழைக்கின்ற மக்கள் உண்ணுகின்ற உணவு பற்றியும் சத்துணவு குறைபாடு பற்றியும் மார்க்சும் எங்கல்சும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். பிரிட்டன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கின்ற மக்கள் ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதைக் கவனத்துடன் ஆராய்ந்தார். பிரிட்டிஷ் ஆய்வாளர்களான சைமன், அந்தோனி வோல் ஆகியோரது அறிக்கைகளை ஆதாரமாக கொண்டு மார்க்ஸ் ஆய்வு செய்தார்.
கிராமத்தைப் போலவே நகரத்திலும் பிரதான உணவு ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் தேநீர்…… கிராமப்புற ஏழைகள் பறவைகளை சாப்பிட்டால், நகர்ப்புற ஏழைகள் முன்கூட்டியே பிறந்த கன்றுகளையும், நோயுற்ற ஆடுகளையும் சாப்பிட்டார்கள்…. ஸ்டாக்கிங் நெசவாளர்கள், காலணி தயாரிப்பாளர்கள், தையல்பெண்கள் மற்றும் பட்டு நெசவாளர்கள் ஆகியோர் வாரத்திற்கு ஒரு பவுண்டுக்கும் குறைவான இறைச்சியையும், எட்டு அவுன்ஸ் கொழுப்புக்கும் குறைவான உனவையும் சாப்பிட்டனர். அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகளை ரொட்டியிலிருந்து மட்டுமே பெற்றுகொண்டனர்.
லங்காஷயர் தொழிற்சாலைகளின் ஊழியர்கள் குறைந்தபட்ச அளவுள்ள கார்போஹைட்ரேட்டுகளைகூட பெறவில்லை. வேலை இழந்த தொழிலாளர்கள் இன்னும் குறைவாகவே பெற்றனர். வேலைவாய்ப்பு அற்ற தொழிலாளர்கள் குறைந்தபட்ச புரதத்தின் அளவைவிட குறைவாகப் பெற்றனர். ஒரு தொழிலாளி உட்கொள்ளும் சராசரி இறைச்சி வாரத்திற்கு 13.6 அவுன்ஸ் மட்டுமே. விவசாயத் தொழிலாளர்களும் இதேபோல் கார்போஹைட்ரைடு உள்ள உணவையும் புரதம் நிறைந்திருக்கும் உணவையும் இழந்தனர். தொழில்துறை நகரங்களில் தொழிலாளர்கள் போதிய அளவு ஊட்டச்சத்து உட்கொள்வதைக் காட்டும் அட்டவணையை அவர் உருவாக்கினார்.
விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களில் பெரும் பகுதியினரின் உணவு போதுமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இல்லை. எனவே அவர்கள் அனைவரும் பட்டினி நோய்களால் மிகவும் துன்பப்படுகின்றனர் என்று மார்க்ஸ் எழுதினார். மார்க்ஸ் பல்வேறு தொழிலாளர்களின் ஊட்டச்சத்து குறித்து ஒரு புள்ளிவிவர அட்டவணையை உருவாக்கினார். அந்த முடிவுகள் அவரை திடுக்கிட வைப்பதாக இருந்தன. அதாவது, இரு மடங்கு அதிகமாக உழைக்கும்போது, விவசாயத் தொழிலாளர்கள் 61 சதவிகித புரதத்தை மட்டுமே பெற்றனர், 79 சதவிகிதம் நைட்ரஜன் அல்லாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் 70 சதவீதம் கனிமப் பொருட்கள் ஆகியவற்றை பெறுகின்றனர் என்று மார்க்ஸ் கண்டறிந்தார்.
தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்து ஏங்கல்ஸும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 1845 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, உணவு பற்றாக்குறை மற்றும் அதிகரித்த விலைகள் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் நகர்ப்புற தொழிலாளர்கள் மிகக் குறைவான ஊட்டச்சத்து கொண்ட உனவை எடுக்கவேண்டிய நிலையிருந்தது. அதேபோல் பல்வேறு நோய்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடே முக்கிய காரணமாகும் என்று வாதிட்டார். இதை மருத்துவ துறையினர் கண்டறிந்து கூறுவதற்கு பல ஆண்டுகளுக்கும் முன்பே எங்கல்ஸ் கண்டறிந்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.