இந்தியாவில் மேகி, கோக், குர்குரி போன்ற விவாதத்திற்கு உள்ளாகும் அந்நிய பொருட்கள், எளிதில் சட்டத்தின் பிடியிலிருந்தே நழுவி விடுகின்றன.
தன் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானம் இல்லாத வரை, உடலை வருத்தி, உணவில் மிச்சம் பிடித்து பலர் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, வாழ்வில் தன்னிறைவு அடைந்து விட்டோம் என்று பலர், மெக்டோனால்ட்ஸ், கே.எஃப்.சி போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகளை உண்டு, நல்ல உடலையும் கெடுத்து வருகிறார்கள்.
மேற்கத்திய உணவுகள் பெரும்பாலும், கூடுதல் ரசாயனங்களாலும், பதப்படுத்துதலாலும், சிதைக்கப்பட்ட உணவாகவே இருக்கும். மேலும், என்ன வகையான சுவையூட்டும் பொருட்களை பயன்படுத்தினார்கள், என்ன எண்ணெய் வகை சேர்க்கப்பட்டுள்ளது, என்ன மாமிசத்தில் இந்த உணவு தயாரானது என்பது போன்ற தகவல்கள் மறைக்கப்பட்டு, அல்லது மறைமுகமான தெரிவிப்பாகவே இருக்கும். இவை பல வியாதிகளின் ஊற்றாக இருக்கிறது.
தற்போது பெருகி வரும் பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு உணவு கலாச்சாரத்தால் கவரப்பட்ட தமிழ் இனம் மெல்ல மெல்ல அதன் சுவைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது. ருசிக்கு சாப்பிடும் எண்ணமும், சோம்பேறித்தனமும் மேல்நாட்டு உணவு வகைகள் இங்கு காலூன்ற காரணமாகி விட்டன. இதன் விளைவாக வீதிக்கு வீதி பீட்சா கார்னர்கள் முளைத்து நிற்கின்றன.
இந்த உணவு முறை மாற்றத்தால் பெண்கள் பூப்பெய்தும் வயதில் கூட மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் சராசரியாக பூப்பெய்த வேண்டிய 14 வயதிற்கு முன்னதாக, அதவாது 11-12 வயதிலேயே பூப்பெய்தி விடுகின்றனர். மேல்நாட்டு உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் மிதமிஞ்சிய வளர்ச்சியால், ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து, இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கூடுதல் சுவை மற்றும் நிறத்திற்காகவும், நூடுல்ஸ் வகைகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காகவும், சேர்க்கப்படும் ரசாயன பொருட்களால் அல்சர், குடல் புற்றுநோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகின்றன.
பீட்சா தயாராகும் மைதாவில் நார்ச்சத்து இல்லாததால், மேற்கண்ட நோய்களுடன் இலவச இணைப்பாக மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் கிடைக்கும்.
இதை எல்லாம் தவிர்க்க கலோரி, கொழுப்பு சத்துகள் குறைவாகவும், புரதம், இரும்பு, நார்ச்சத்துகள் அதிகமாவும் உள்ள நமது பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
சமீபத்தில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் கஸ்தூரி என்ற பெண் கதாபாத்திரத்தில் சினேகா நடித்திருந்தார். மேலைநாட்டு ஜங்க் ஃபுட் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, அதன் வீரியத்தால் புற்றுநோய் உண்டாகி, இறந்துபோன தன் குழந்தைக்காக கார்பரேட் முதலாளிகளை எதிர்த்து, நீதிமன்றம் ஏறி போராடுகிறார். தன்னால் ஆதாரங்களை நிரூபிக்க இயலாமல் போக, வழக்கில் தோல்வி அடைகிறார்.
அதனால் தன்னையே ஆதாரமாக்க முடிவெடுக்கிறார். தன் வீடு முழுக்க சிசிடிவி கேமராவை வைக்கிறார். மூன்று வேளையும் அந்த கம்பெனியின் ஜங்க் ஃபுட்டையே உணவாகச் சாப்பிடுகிறார். இப்படி தன் உடல் மீதே ஆய்வுசெய்து, தன் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணமான கம்பெனியை, சட்த்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க முயல்கிறார்.
இப்படத்தில் சினேகா செய்த ஆபத்தான முயற்சியை போல, ஏற்கனவே 2004-ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா பகுதியைச் சேர்ந்த மார்கன் ஸ்பர்லாக் (Morgan Spurlock) என்பவர் செய்திருக்கிறார். அவர் அதற்காகத் தேர்ந்தெடுத்தது உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான “மெக்டொனால்ட்ஸ்”.
மார்கன் ஸ்பர்லாக் தனக்காக இதை செய்யவில்லை, ஒருநாள் குடும்பத்தோடு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தால் தாங்கள் உடல் பருமனடைந்து விட்டதாகக் கூறி, இரண்டு சிறுமிகள் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்த ஒரு செய்தியை பார்த்துள்ளார், அப்போதுதான் அவருக்கு இந்த விசித்திரமான யோசனை தோன்றியது. உடனே, தன்னையே ஆய்வுக்குட்படுத்த முடிவெடுக்கிறார்.
உடனே அவர் பொதுநல மருத்துவர், இதயநோய் நிபுணர், குடல் மற்றும் இரைப்பைக்கான சிறப்பு மருத்துவர் என மூன்று மருத்துவர்களிடம் சென்று தன் உடலை பரிசோதனை செய்கிறார். மார்கன் ஸ்பர்லாக்கின் உடல்நலம் நார்மலாக இருப்பதாக அந்த மூன்று மருத்துவர்களும் சான்றளிக்கிறார்கள்,
பிறகு தனது ஆய்வைத் தொடங்குகிறார். இந்த ஆய்வு முழுவதையும் முப்பது நாள்களுக்கு ஆவணப்படமாகவும் தயாரிக்கிறார். தினமும் மூன்று வேளையும் தண்ணீர் உட்பட, மெக்டொனால்ட்ஸ் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். முப்பது நாள்களுக்குள் மெக்டொனால்ட்ஸ் மெனுவில் இருக்கும் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டிருக்க வேண்டும்; மெக்டொனால்ட்ஸ் ஊழியர்கள் அவருக்கு ‘சூப்பர் சைஸ் உணவை அளிக்கவா?’ என்று கேட்டால், அதை மறுக்காமல் வாங்கிச் சாப்பிட வேண்டும்’ என்று தனக்குத் தானே நிபந்தனைகள் போட்டுக்கொள்கிறார்.
ஆய்வு தொடங்கிய ஐந்தாவது நாள்களிலிருந்தே உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்கிறார். அப்போது அவரது உடல் எடை நாலரை கிலோ கூடியிருந்தது. பன்னிரண்டு நாள்களில் ஏழரை கிலோவாக அதிகரிக்கிறது. முப்பதாவது நாளில் அவரது உடல் எடை பதினோரு கிலோ கூடியிருந்தது.
பின்னர் தனது மருத்துவர்களிடம் சென்று மீண்டும் அதே பரிசோதனைகளை செய்கிறார். அவரது கல்லீரல் மிகவும் பாதிப்படைந்திருந்தது. உடலில் கொழுப்பு அளவு அதிகரித்திருந்தது,
மார்கன் ஸ்பர்லாக் முப்பது நாள்கள் தன்னையே ஆய்வுப் பொருளாக்கி எடுத்த இந்த ஆவணப்படத்தை ‘சூப்பர் சைஸ் மீ’ (Super Size Me) என்ற பெயரில் வெளியிட்டார்.
அமெரிக்க மக்களிடையே பரவி வந்த ஜங்க் ஃபுட் கலாசாரத்துக்கு எதிராகவும், உடல் பருமன் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதிலும் ‘சூப்பர் சைஸ் மீ’ ஆவணப்படம் சிறப்பான பங்களிப்பைத் தந்தது. 2004-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காகவும் இந்த ஆவணப்படம் சிபாரிசு செய்யப்பட்டது.
ஒரு மாதத்தில் திடீர் மாற்றம் கண்ட மார்கனின் உடல், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு பதினான்கு மாதங்கள் தேவைப்பட்டன.
’சூப்பர் சைஸ் மீ’ ஏற்படுத்திய தாக்கம் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவைத் தந்தது. ஆவணப்படம் வெளியான சில வாரங்களில் மெக்டொனால்ட்ஸ் ‘சூப்பர் சைஸ்’ உணவுப் பொருள்களை விற்பனை செய்வதை நிறுத்தியது.
ஆனாலும், “அதற்குக் காரணம் இந்த ஆவணப்படம் அல்ல” என்றெல்லாம் அறிக்கைகள் வெளியிட்டது. மேலும், தன்மீது விழுந்த அவப்பெயரை அழிக்க, உலகம் முழுக்க பல மில்லியன் டாலர்களை மெக்டொனால்டு நிறுவனம் விளம்பரத்திற்காக செலவு செய்தது.
மார்கன் ஸ்பர்லாக்கின் ‘சூப்பர் சைஸ் மீ’ இன்றும் அமெரிக்காவில் உடல் பருமன் தொடர்பான விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
இன்றைய தினங்களில், மேலை நாடுகளில் விழிப்புணர்வு வேகமாக பரவுகிறது, ஆனால் இந்தியாவில் மேகி, கோக், குர்குரி போன்ற விவாதத்திற்கு உள்ளாகும் அந்நிய பொருட்கள், எளிதில் சட்டத்தின் பிடியிலிருந்தே நழுவி விடுகின்றன.
உலகில் அனைத்து இடங்களிலும் உள்ள மக்கள், தங்களுக்கு எளிதில் கிடைக்கும் கேடு தரும் உணவுகளையும், அதனால் வரும் பல நோய்களையும் கண்டறிந்து, மாற்றங்களை தேடி செல்கின்றனர். ஆனால் நாம் பன்னாட்டு கம்பெனிகளின் பரிசோதனை எலிகளாகவே இருக்கிறோம்.
நமக்கு தான் விழிப்புணர்வு தேவை. அமெரிக்காவில் சாப்பிடுகிறார்கள் என்ற ஒற்றை தகவலுக்காகவும், இதை சாப்பிடுவதால் சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகி விடுவோம் என்கிற போலி கௌரவத்திற்காகவும், என்பதுகளில் வர வேண்டிய நோய்களை முப்பதுகளில் விலை கொடுத்து வாங்கி விடுகிறோம்.
நாம் விழித்து, ஒன்றுபட்டு அவற்றை எதிர்க்க முடியாவிட்டாலும், தனி மனிதனாக அவற்றை நிராகரித்தாலே போதும். நமது இந்திய பாரம்பரிய உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் நமது பாரம்பரிய உணவுகளை இழிவானதாகவும், பழமையானதாகவும் எண்ணுகிறோம்.
ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றில் நமக்கு தேவையான சத்துகள் முழுமையாக உள்ளன. இதனுடன் தினந்தோறும் பழங்கள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
நெடு நாளைக்கு கெட்டு போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ரசயானங்களை கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். நல்ல இயற்கை அங்காடிகளில், நல்ல நஞ்சற்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
மருத்துவத்துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால், எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். ஆனால் நலமுடன் வாழ்கிறோமா என்றால் இல்லை.
நமது உணவில் இன்று சேர்க்கைப் பொருட்கள் (additives) மிக அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. 1950களில் 800 சேர்க்கைப்பொருட்கள் மட்டுமே இருந்தன, ஆனல் இன்று 10,000-க்கும் மேல் உள்ளன. உடல் பருமன் ஆனவர்களையும், நோயாளிகளையும் உருவாக்குவதில் கார்பரேட் நிருவனங்கள் முதல் அரசாங்கங்கம் வரை அனைவருக்கும் பெரும் பங்கு உண்டு.
அனைவரும் தான் உண்ணும் உணவில் என்னவெல்லாம் கலந்துள்ளது என்பதை அறிந்திருக்க வேன்டிய அவசியத்தை உணருங்கள்.
உங்களுக்கு எதேனும் ஒன்று தவறென்றோ, மறைக்கப்படுகிறது என்றோ, சந்தேகம் எழுந்தால், உடனே குரல் எழுப்புங்கள், தயங்காதீர்கள். முழுமுயற்சியுடன் உங்களால் இயன்றவரை எதிர்க்குரல் கொடுங்கள்.
இந்த நூற்றாண்டின் பிரபல நோய்களாக விளங்கும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையே இந்த மேலை நாட்டு உணவு கலாச்சாரம் தான். அதனால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து தப்பிக்க, மீண்டும் நமது பாரம்பரிய உணவு முறைகளை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.
ஆகவே, உடல் ஆரோக்கியம் கருதி நமது பாரம்பரிய உணவு முறைக்கு மாறுவோம்… நலம் பெறுவோம். நோயற்ற வாழ்வே… குறைவற்ற செல்வம்