உளவியலைப் பொறுத்தவரை well being என்பது உடல், உள்ளம், சுற்றுப்புறம் மற்றும் சமூக வாழ்வுகொண்டு அளக்கப்படும். ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதற்கு இந்த அளவைகளும் முக்கியம்.
நல் வாழ்வு அளவீடுகள் ஒவ்வொரு இடத்திற்கும் மாறும். பொருளாதாரம், குடும்ப அமைப்பு, மகிழ்ச்சி, வாழ்விற்கான ஆதார தேடல் எனப் பல நுண்ணியவகையில் பிரிக்கலாம்.
ஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம். என்னமாதிரியான உணவு, நீர், உபயோகிக்கும் மருந்துகள், சோப், ஷாம்பு, கிரிம் எல்லாம் சேர்ந்தே நாம்.
மனதுக்கும் உணவுக்கும் தொடர்பு வெகுகாலமாக இருக்கிறது. இங்கு நாம் பேசப்போவது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை வகையில் இல்லை. எனினும் நாம் வரலாற்றில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது. நம் வீட்டில் ஜாடிகளில் போட்டுவைத்த ஊறுகாய்கள் எங்கே? அதை எப்படிக் கண்டுப்பிடித்தார்கள்? நொதிக்க வைத்துச் சாப்பிடுவது எப்படி எல்லா நாடுகளிலும் ஏதோ ஒருவகையில் இருக்கிறது?
இன்னொரு விஷயம், ஃபாஸ்டிங் எனப்படும் உண்ணா நோம்பு இல்லாத மதமே உலகத்தில் இல்லை. ஏன் எல்லா மதங்களும் விரதமுறைகளை முன்வைக்கின்றன?
சைவம், அசைவம் என்று இல்லாமல் எது நல்லது, எது நல்லதில்லை என எப்பொழுது பேசப்போகிறோம்?
உலகில் எத்தனைவிதமான மனிதர்கள் உள்ளானவரோ அத்தனைவகை டயட் முறைகள் உள்ளன. உணவு அறிவியல் ஒரு கடல். மருத்துவர்கள் ஒரு பாடமாக, ஒரே ஒரு புத்தகமாக படிப்பார்கள். என்னை மருத்துவர்களும் நாடிவருவதன் ரகசியம் ஒன்றுதான். அவர்கள் சிம்ப்டம்(syptoms) வைத்து நோயாளிகளைக் குணப்படுத்துவார்கள். நாங்கள் மிக அடிப்படை… வேரில் வேலை செய்வோம். இருப்பினும் மருத்துவ அறிவியல்தான் நம்பர் ஒன், அதில் மறுப்பேதும் இல்லை. அது இல்லாவிடில் நாம் இல்லை. எனவே உணவு அறிவியல், மன அறிவியல், சமூக அறிவியல் எல்லாம் சேர்ந்து மருத்துவத்துடன் பயணிக்கவேண்டிய நேரம் வந்திருக்கிறது. இதுக்கான மாற்றத்தின் பெரிய ஷிப்ட்.
அடுத்து மனம் எனப்படும் சைக்காலஜி துறையில் சோஷியல், ஹெல்த், கிளினிக்கல், இண்டஸ்ட்ரி, கன்ஸ்யூமர் என்று பல்வேறு துறைகள் உள்ளன. பாசிடிவ் சைக்காலஜி என்ற துறையும் இப்பொழுது பல்கலைகழங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதில் நல்வாழ்வுதான் அடி நாதம்.
சிக்மெண்ட் ஃபிராயிட், வாட்சன் என மனம் பற்றி அதுவும் ஆழ்மனம் பற்றி ஜல்லியடிக்க ஆயிரமாயிரம் அறிவியல் விஷயங்கள். சிலவற்றை எளிமையாகப் பேசலாம். சைக்காலஜியில் இரண்டே யுகம்தான். சி.மு, சி.பி அதாவது சிக்மெண்ட் ஃபிராயிட் முன்பு, பின்பு. அவரைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் அடிப்படை காமம்தான். அதாவது செக்ஸ் என்பதை விருப்பம், ஆழ்மனத் தேடல் என்று வரையறுத்திருந்தார். அதை ஆதரித்தோ, மறுத்தோதான் உளவியல் அடிப்படைகளை நாம் பேசவே முடியும்.
புதிதாக கார்வாங்க நினைக்கிறோம். என்ன நிறம், என்ன மாடல் என்று முடிவெடுக்கிறோம். உதாரணமாக, வோல்ஸ் வேகன் போலோ என்று எடுத்துக்கொள்ளலாம். அதுவும் ஆரஞ்சு நிறம். அதுவரை அப்படி ஒரு கார் இருப்பதே நம் கண்ணுக்குத் தெரியாது.
நாம் முடிவெடுத்தவுடன் சிக்னலில், ஹோட்டல் வாயிலில், பார்க்கிங்கில் என் பல்வேறு இடங்களில் அதே நிறம், அதே மாடல் கண்ணில்படும்.
அட இத்தனை நாள் இவ்வளவு கார்கள் இருப்பது தெரியலியே என யோசிப்போம்.
ஏனெனில் நான் சப் கான்ஷியஸ் மைண்ட் அதாவது அடுத்த அடுக்காகச் செயல்படும் மனதில் ஒன்றைப் பதிந்துவிட்டால் அது நமக்கு தேடிக்கொடுக்கும். அதற்குப் பதிவுசெய்வது மட்டும்தான் வேலை. இந்தக் கட்டுரை உங்களின் கண்ணில்பட்டு முழுக்க வாசிக்கத் தூண்டுவதுக்குக்கூட உங்களின் தேடலின் ஆழ்மன விருப்பமாக இருக்கலாம். அதெல்லாம் சரி…
சப் கான்ஷியஸ் மைண்டுக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு?
அதைத்தவிர அன் கான்ஷியஸ் மைண்ட். அதுதான் நியூரான்களில் பதியப்படும் மாய செய்திகள். அதை அடைவது மிகக் கடினம், இங்கிருந்துதான் நம் உணர்வுகள் புறப்படுகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
உண்மையைச் சொன்னா எந்த மனிதனுக்கும் தன்னைப் பற்றிக் கற்றுக்கொள்ளவே இந்த வாழ் நாள் போறாது.
அத்தனை இருக்கிறது அதில் மனம் மிகப்பெரிய மறைவு சக்தி.
சமீபத்தில் ஒரு டெட் டால்க், டாக்டர். டேனியல் ஆமேன்… அமெரிக்காவின் சிறந்த உளவில் நிபுணர்களில் ஒருவர் பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றை எம்.ஆர்.ஐ.யில் கண்டுப்பிடிக்க முடியும் என்கிறார். மனநல மருத்துவர்கள் மட்டும் பேசியே மனோ வியாதி கண்டுப்பிடிப்பது சரியல்ல என்பது இவர் விவாதம்.
சைக்காலஜிஸ்ட்கள் பொறுத்தவரை அளவீடுகளுக்குள் இருந்தால் மனநலம் மிக்கவர்கள் என்கிறார்கள். அதிகமோ, குறைவோ மனநலம் சரியில்லை என்று அர்த்தம்.
அந்த அமெரிக்க மருத்துவர் இன்னொன்று சொல்கிறார். யார் மனதில் இருப்பதையும் யாரும் கண்டுப்பிடிக்க முடியாது. அப்படிச் சொன்னால் அது முட்டாள்தனம். தானாக ஒரு மனிதன் வெளிப்படுத்துவதை மட்டுமே அறிய முடியும் யூகித்தல் என்பது மனநல பிரச்சனைக்கு அடிக்கோலும் என்கிறார், இந்த யூகித்தல் எங்கு எங்கு நடக்கிறது? அவளுக்கு இவள் ஹார்ட்டின் போட்டால்கூட அப்படியா, இப்படியா என்று யூகிக்கும் ஒரு சமூகம் இருக்கிறது. ஆம் அதேதான்.
சரி… உணவு மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். மனம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் இந்த ‘இ’ என்னது. இணைய சமூகமா? என்றக்கேள்வி வந்திருக்கலாம்.
சமூக நல்வாழ்வு என்பது மனிதனுக்கு அடிப்படை அவசியம். ஆனால் நாம் புழங்கும் சமூகம் எது என்பதில் தெளிவாக இருக்கிறோமா?
காலையில் அலாரம் அடிக்கிறது. மொபைல் ஆஃப் செய்கிறோம்.
தியானம் செய்ய ஒரு குருப் தியானத்தில் வாட்ஸ்அப் மெசெஜ்கள் முடிக்கிறோம்
பல் தேய்த்துக்கொண்டே நாலு டிக்டாக் பாட்டுக்கள்.
காபியின் பொழுது டிவிட்டர்
பின் இன்ஸ்டாகிராம்.
அவசரமாக ஆபிஸ் மெயில்கள்
ஆபிஸ் கிளம்பும்வரை அமேசான்.
அலுவலகம் வந்தப்பின் ஒரு பக்கம் ஃபேஸ் புக்
காபிக்கு இணையத் தோழி
கல்லூரி வாட்ஸ்அப் குருப் மீட் ரிசார்ட்டில்
ஃபேமிலி குருப்பில் அமெரிக்கா மாமன் வீட்டு நாய்குட்டி விடியோக்கள்
மனைவியின் புடவை விற்கும் இணையத்தள வியாபார கணக்குகள்.
மாதாந்திர பிக் பாஸ்கட், ஸ்விக்கி, அமேசான் வரவு, செலவு கணக்குகள்.
ரெட் பஸ் பொஙகலுக்கு, டிசம்பருக்கு மேக் மை டிரிப், ரகசிய சந்திப்புக்கு ஓயோ…
டேட்டிங்க்கு, சாட்டிங், ப்ரேக் அப், இணைய பாய் ஃரெண்ட், இணைய துணை, ஃபேஸ் புக் காதலி, ஆன் லைன் கவுன்சிலர்.
தூங்கும் பொழுதும் எம்.ஐ.பாண்ட். தூக்கம் கண்காணித்து அப்டேட்டப்படும். வேலைகளிலும் இணையம் பெருமளவுக்கு நுழைந்துவிட்டது.
ஏன் இணைய எழுத்தாளர்கள் என்ற சமூகம் உருவாகி… எழுத்தாளர்களும் இணையத்தில் இணையவேண்டிய கட்டாயம். இணைய பத்திரிக்கைகள், செய்திகள், யூட்யூப் சேனல்கள் என பெரிய வாய்ப்புகளை இணையம் நம் கண்முன்னே விரித்துக் காத்திருக்கிறது.
என் பக்கத்து வீட்டுக் குழந்தைக்குப் பாட்டு ஆன்லைனில்… என் பையன் வெப்கோடிங் கற்றுக்கொளவது ஆன்லைனில், டிவி காலம் குறைந்து அமேசான், நெட் பிளிக்ஸ் ஆரம்பித்துவிட்டது.
அதெல்லாம் சரி… உங்கள் அக்கம்பக்கத்தோடு கடைசியாக அளவாளியது எப்பொழுது?
இப்பொழுது சொல்லுங்கள்… நாம் எந்தச் சமூகத்தில் வசிக்கிறோம்? அல்லது நம் சமூகத்தில் யார் யார் பங்கு வகிக்கிறார்கள்.
பெரும்பாலான நம் சமூக மனிதர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? ஒருப்பக்கம் நேரடி சமூகம் இருக்கட்டும். இன்னொரு சமுகத்தை கவனிக்கவேண்டிய கட்டாயம்.
அந்தச் சமூகம் இப்பொழுது கட்டுப்பாடு இல்லாமல் ஹிப்பி கலாச்சாரம்போல் ஆரம்பித்திருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ நம் குழந்தைகள், வளரும், வளரப்போகும் சமூகமாகவும் மாறி இருக்கிறது. இந்தச் சமூகத்தில் மூத்தோரே நாம்தான். நமக்கு இந்த இணைய சமூகத்தைச் சரிப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
வீடு, நாடு சுத்தம் என்பதுபோல் இணையமும் அதன் சரியான கட்டுப்பாட்டில் இயங்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இணைய மனிதர்களுக்கும் பொறுப்புகள் உண்டு. நாம் சரியானதைத் தொடர்ந்து அளிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையெனில் மிக மோசமான விபத்துகள் நடக்க வாய்ப்பு உண்டு, சரியான பாதையில் இருக்கும் வேகத்தடைகள், சிக்னல்கள், ஹெமெட், சீட் பெல்டகளின் அவசியம் பற்றி உரையாட வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்