அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெற்றோருக்கு அங்கேயே பிறந்த மகன், சிறுவனாகி தனது தாய் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு விடுமுறையை கழிக்க வந்தான். காலையில், கார்ட்டூன் கதாபாத்திரம் போன்ற டூத் பிரஷை எடுத்துக்கொண்டு அவன் பல் துலக்கிக்கொண்டிருக்க, அவனது தாத்தாவோ வீட்டு முற்றத்தில் நின்றிருந்த வேப்பமரத்தில் ஒரு குச்சியை முறித்து வாயில்வைக்க, அதை பார்த்த சிறுவன், ஓடிப்போய் தனது தாயாரிடம் ‘தாத்தா காலையிலே மர குச்சியை முறித்து கடித்து தின்கிறார்’ என்றான்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெற்றோருக்கு அங்கேயே பிறந்த மகன், சிறுவனாகி தனது தாய் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு விடுமுறையை கழிக்க வந்தான். காலையில், கார்ட்டூன் கதாபாத்திரம் போன்ற டூத் பிரஷை எடுத்துக்கொண்டு அவன் பல் துலக்கிக்கொண்டிருக்க, அவனது தாத்தாவோ வீட்டு முற்றத்தில் நின்றிருந்த வேப்பமரத்தில் ஒரு குச்சியை முறித்து வாயில்வைக்க, அதை பார்த்த சிறுவன், ஓடிப்போய் தனது தாயாரிடம் ‘தாத்தா காலையிலே மர குச்சியை முறித்து கடித்து தின்கிறார்’ என்றான்.
தாயார், ‘அவர் குச்சியை கடித்து தின்னவில்லை. பல் துலக்குகிறார். நீ பயன்படுத்தும் பிரஷ் மற்றும் பேஸ்ட்டுக்கு பதில் அது இயற்கை கொடுத்த ‘2 இன் 1 பல்துலக்கி’. அதை வைத்து பிரஷ் செய்தால் பல், ஈறு நோய்கள்வராது’ என்று விளக்கியபோதும், அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த பழைய முறை வழக்கொழிந்துபோய்விட்டதுதான் அதற்கான காரணம்.
வேப்பங்குச்சியை போன்று காணாமல் போன பொருட்கள் நிறைய உண்டு. வீட்டுக்குள் இருந்த அம்மிக்கல், ஆட்டுக்கல், கல்அடுப்பு, முறம்.. இப்படி தேடிப்பிடிக்கவேண்டியவைகளின் பட்டியல் வெகு நீளம்.
பழமைவாய்ந்த இந்த பொருட்கள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டதால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். முதுகுவலி, கை-கால் உளைச்சல் என்று கூறிக்கொண்டு ஆலோசனை கேட்கும் பெண்களிடம் டாக்டர்கள், ‘நீங்கள் வீட்டில் ஏதாவது வேலைபார்க் கிறீர்களா? உடற்பயிற்சி செய்கிறீர்களா? உங்கள் உடலுக்கு தேவையான இயக்கம் கிடைக்கிறதா?’ என்று கேட்கிறார்கள்.
பெண்களின் உடல் இயக்கத்திற்கு காரணமாக இருந்த துவைத்தல், அரைத்தல், இடித்தல், ஆட்டுதல் போன்ற அனைத்துக்கும் மெஷின்கள் வந்துவிட்டன. அதனால் பெண்களின் உடல் இயக் கம் இன்றி ஆரோக்கியம் குறைந்துவிட்டது.
கைகளால் சோப்பிட்டு, அடித்து, அலசி, துணி துவைப்பது கைகளுக்கும், முதுகெலும்பிற்கும் சிறந்த உடற்பயிற்சியாக இருந்தது. குனிந்து, நிமிர்ந்து செய்த அந்த வேலை முதுகெலும்பை பலப்படுத்தியது.
அதற்கு பதிலாக ‘வாஷிங் மெஷின்’ வந்தது. சோப்பிட்டு, அடித்து துவைத்து அலசிய முறை மாறியது. ஆனால் முதுகுவலி பிரச்சினை இருப்பவர்களுக்கு வாஷிங் மெஷின் ஒரு வரப்பிரசாதமாக மாறியது. துணி துவைப்பதற்கு ஆகும் நேரம் குறைந்தது. மழைக் காலத்திலும் ‘டிரையர்’ துணிகளை உலரவைத்து பலனளித்தது.
மழைக்காலம் என்பது பழமையான முறையில் துணிதுவைப்பதற்கு கடினமான காலம்தான். துவைப்பதும், உலர்த்துவதும் சிரமத்திற்குரியதாகிவிடும். போர்வை போன்று கனமானவைகளை துவைப்பது வழக்கமாகவே பலராலும் நடக்கிற காரியம் இல்லை. அதற்கு அதிக பிரயத்தனம் தேவைப்படும்.
ஆனால் வாஷிங்மெஷின் வந்ததோடு மனிதர்களின் உடலுழைப்பு குறைந்துவிட்டது. கைகளால் துணி துவைக்கும்போது உடலுக்கு கிடைத்த பலனையும், உடைகளுக்கு கிடைத்த பலனையும் வாஷிங் மெஷின்கள் சுருக்கிவிட்டன. கைகளால் துவைக்கும்போது காட்டன், சில்க், பாலியெஸ்டர் போன்ற ஒவ்வொன்றையும் ஒவ்வொருமுறையில் துவைத்தார்கள். அதனால் அந்த துணிகள் அதிகமாக பளிச்சிட்டன. அதிக காலம் உழைத்தன. உள்ளாடைகள் கைகளால் துவைக்கப்பட்டபோது, அதன் ‘எலாஸ்டிக்’தன்மை பாதிக்கப்படாமலும் இருந்தது. இன்னொன்று கைகளால் துணிகளை அலசும்போது அதில் இருக்கும் சோப்பு நுரை முழுமையாக அகன்றது. வாஷிங்மெஷினில் நுரை முழுமையாக அகலுவதில்லை. சோப் பவுடரில் ரசாயனம் அதிகம் இருப்பதால், அது அகலாமல் இருந்து, அந்த துணிகளை அணிபவர் களுக்கு சில நேரங்களில் சரும அலர்ஜி ஏற்படவும் காரணமாகிவிடுகிறது.
அம்மியும், ஆட்டுக்கல்லும் தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய நிலைக்கு சென்றுவிட்டது. மசாலாக்களை அரைப்பதற்கு அம்மி- தோசை, இட்லிக்கு மாவு ஆட்டுவதற்கு ஆட்டுக்கல்- தானியங் களில் இருந்து மாவு இடிக்க உரல், உலக்கை போன்றவைகள் புழக்கத்தில் இருந்தன. இப்போது அந்த இடத்தை மிக்சியும், கிரைண்டர்களும் பிடித்துக்கொண்டன.
அம்மி, ஆட்டுக்கல், உலக்கை எல்லாம் மிக சிறந்த உடற்பயிற்சி கருவிகள் போன்றவை. அவைகளை இயக்கி, கையாளுவதே தனிக்கலை. அவைகளை இயக்கும்போது உச்சி முதல் பாதம் வரை வலுப்பெறும். உடல் வடிவம் கிடைக்கும். ஊளைதசைகள் தொங்காது. குண்டு உடல் என்ற கேள்விக்கே இடமிருக் காது.
ஆனால் இந்த மிக்சி, கிரைண்டர் எல்லாம் வேலைக்கு போகும் பெண்களுக்கு மிகுந்த பலன்களை தருகிறது. மசாலா அரைப்பதையும், மாவை ஆட்டுவதையும் மிக எளிதான வேலையாக மாற்றிவிட்டது. அம்மியையும், ஆட்டுக்கல்லையும் பராமரிப்பதைவிட, இவைகளை பராமரிப்பது எளிது. கிரைண்டர் கற்களை சிரமமில்லாமல் தூக்கி சுத்தப்படுத்திவிட முடிகிறது. இதில் குறிப்பிடத்தக்க நெருக்கடி என்னவென்றால், மின்சாரம் இல்லாவிட்டால் அவ்வளவுதான். எந்த வேலையும் நடக்காது.
மூன்று கற்களை அடுக்கி, அதன் மீது பாத்திரத்தைவைத்து, காய்ந்த விறகுகளை எரியவிட்டு சமைத்தது அந்தக்காலம். அந்த விறகு அடுப்புகளின் இடத்தை கியாஸ் அடுப்புகளும், இன்டக்ஷன் ஸ்டவ்களும் பிடித்துக்கொண்டன. விறகு அடுப்பில் எவ்வளவு பெரிய பாத்திரங்களையும் வைத்து சமைக்கலாம். அதை தாங்கும் அளவுக்கு கற்களை அடுக்கினால் போதும். வீட்டை சுற்றி வளரும் மரங்களில் இருந்து விறகும் கிடைத்தது. நவீன அடுப்புகள் வந்ததும் சமையல் செய்யும் பெண்களுக்கு கரி, புகையில் இருந்து விடுதலை கிடைத்தது. மட்டுமின்றி விரைவாக சமையலை செய்துவிடவும் முடிகிறது. விறகு அடுப்பில் பாத்திரங்களில் கரி பிடித்தன. அதனை துலக்குவது சற்று கடினமான வேலையாக இருந்தது. கியாஸ் அடுப்புகள் பாத்திரம் துலக்கும் வேலையையும் எளிதாக்கியது.
மக்கள் தொகை பெருகி வர, மரங்கள் அழிக்கப்பட்டன. விறகு கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. இன்னொரு புறத்தில் விறகு அடுப்பு பயன்பாட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட சுவாச தொடர்புடைய நோய்களை பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதனால் ஸ்டவ் அடுப்புகள் நீக்கமற நிறைந்துவிட்டது.
‘என்ன இருந்தாலும் விறகு அடுப்பில் சமைத்தபோது கிடைத்த ருசி இப்போது இல்லை’ என்ற குறை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்டக்ஷன் ஸ்டவ்வில் எல்லா பாத்திரங்களையும் வைக்க முடியவில்லை என்ற ஆதங்கமும், கியாஸ் சிலிண்டருக்கு நிறைய பணம் செலவாகிறது என்ற கவலையும் மக்களிடம் இருக்கவே செய்கிறது.
பழைய காலத்தில் எல்லா பாத்திரங்களும் மண்ணிலே தயாரிக்கப்பட்டன. இப்போது ஸ்டீல், நான்ஸ்டிக் போன்றவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு வெண்ணை, நெய் போன்றவைகளை எறும்புகளிடம் இருந்து பாதுகாக்க உரிகளை கட்டி அதில் மண்பாண்டங்களில் பதார்த்தங்களை வைத்து பாதுகாத்தார்கள். மண்பாத்திரங்கள் இயற்கையான பிரிட்ஜ் போன்றும் செயல்பட்டு, பொருட்களை குளிரவைத்து உடலை இதமாக்கியது. இப்போது விதவிதமான நவீன பிரிட்ஜ்கள் பயன்பாட்டில் வந்துவிட்டன.
முன்பு உமிக்கரியை பயன்படுத்தி பல் துலக்கினார்கள். அதோடு உப்பு, மிளகு தூள் கலந்துகொள்ளும் வழக்கமும் இருந்தது. அதற்கும் முன்பு வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கொய்யா குச்சி போன்றவைகளை பயன்படுத்தி பல் துலக்கினார்கள். இப்போது பெரும்பாலானவர்கள் பிரஷ், பேஸ்ட் பயன்படுத்துகிறார்கள். வேலை எளிதாகிவிட்டது. ஆனால் பல் நோய்கள்தான் குறைந்தபாடில்லை.
பழமையும், புதுமையும் கலந்ததுதான் வாழ்க்கை. யாருக்கு எது தேவை என்பதை அவரவர்தான் தீர்மானிக்கவேண்டும்.