சேவல் கூவிட, விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ஆடு, மாடுகளின் கழுத்து மணியோசை…
‘டங்..டங்..டங்’ என உரலில் தானியங்களை இடிக்கும் ஓசை… இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம்தான் கிராமத்து மக்களுக்கு அதிகாலை சங்கீதம். சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் துயில் நீங்குவதற்கான ‘அலாரம்’. இதை உணர்ந்தவர்களுக்கு இன்னமும் இந்த ஓசைகள் காதுகளில் ரீங்காரமிடும்.
அன்றன்றைக்கு உணவுக்கு வேண்டிய கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை அன்றன்றைக்கே உரலில் இட்டு, இடித்துத்தான் தயார் செய்வார்கள். தீபாவளி, பொங்கல், கோயில் திருவிழா போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே அந்த உரல்கள் நெல்மணிகளைப் பார்க்கும். மற்ற நாட்களில் சிறுதானிய உணவுகள்தான். நாவில் ஊறும் அந்த சிறுதானிய உணவுகள் எங்குமே உண்ணக் கிடைக்காது. கைக்குத்தல் அரிசியை மண்பானையில் பொங்கி வடித்து உண்ணும் உணவுதான் உண்மையில் தேவாமிர்தம். அப்படி சுவையான உணவைக் கொடுத்த, உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல் போன்றவற்றை புழக்கடைக்கும் பரணுக்கும் அனுப்பிவிட்டது, நவீன கிரைண்டரும், மிக்சியும். என்னதான் ‘கால சுனாமி’ சுழற்றி எறிந்தாலும், பாரம்பர்யத்தைக் கைவிடாத பல கிராமங்களில் இன்றைக்கும் புழங்கிக் கொண்டிருக்கின்றன, ஆதிகாலத்து கருவிகள்.
நாகரிகம் முழுவதும் ஆக்கிரமிக்காத, பாரம்பர்யமும் முழுதாக அழிந்து போகாத கிராமங்கள்… மதுரை, தேனி மாவட்டங்களில் இன்னமும் உண்டு. நவீனத்துக்கும் பாரம்பர்யத்துக்கும் பாலம் போடுபவை இது போன்ற கிராமங்கள்தான். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலூகாவில் உள்ள எரதிம்மக்கால்பட்டியில் இத்தகைய கருவிகள் இன்னமும் பயன்பாட்டில் உள்ளன என்று கிடைத்தத் தகவலை வைத்து, அங்கு பயணமானோம். க.விலக்கிலிருந்து (கண்டமனூர் சாலைப் பிரிவு) கண்டமனூர் சாலையில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் துப்புலாபுரத்துக்கு அடுத்துள்ள கிராமம், எரதிம்மக்கால்பட்டி. சுமார் 5 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த ஊரில், பாரம்பர்யமும், நவீனமும் கலந்துகட்டிக் கிடக்கின்றன.
மூலையில் தூங்கும் மிக்சி, கிரைண்டர்!
உரலில் கம்பு இடித்துக் கொண்டிருந்த நாகரத்தினத்திடம் பேசினோம். “எங்க ஊர்ல, கிட்டத்தட்ட 20 கோயில் இருக்கு. அதனால வருஷம் முழுக்க திருவிழாதான். அதுக்கு மாவு இடிக்க, கம்பு இடிக்க உரலைத்தான் பயன்படுத்துவோம். எங்க ஊர்ல குத்து உரல் (உரல்), ஆட்டு உரல் (ஆட்டுக்கல்), அம்மி இது மூணும் இல்லாத வீடுகளே இருக்காது. இங்க, வயக்காட்டு வேலைக்குப் போறவங்கதான் அதிகம். சாயங்காலம் கம்பை உரல்ல போட்டு இடிச்சு வெச்சு, காலையில கூழ் காய்ச்சுவோம். வெயில்ல வேலை பார்க்கிறவங்களுக்கு கம்பங்கூழ்தான் டானிக்… ரேசன் அரிசியைக்கூட உரல்லப் போட்டு லேசா ஒரு குத்து குத்தித்தான் சமைப்போம். புட்டு, பலகாரம் செய்றதுக்கும் மாவு இடிக்கறதுக்கும் உரல்தான். எல்லா வீட்டுலயும் அரசாங்கம் கொடுத்த மிக்சி, கிரைண்டர் இருக்குது. ஆனா, அதை யாரும் சீந்தக்கூட மாட்டோம். மூலையிலதான் கிடக்குது.
உரல்ல இடிச்சு செய்ற கூழ், பலகாரத்துல கிடைக்கிற ருசி, மிக்சியில, கிரைண்டர்ல ஆட்டினா கிடைக்காது. எங்க வீட்டுல இருக்கிற உரல், என் வீட்டுக்காரரு சின்னப் பிள்ளையா இருக்கும்போதிலிருந்தே இருக்குதாம். தலைமுறை தலைமுறையா அதுலதான் இடிக்கிறோம். கரன்ட் செலவில்லை. கையில தெம்பு இருந்தா போதும். தினமும் வேலை செஞ்சு கம்பு, சோளம்னு சாப்பிடுறதால யாருக்கும் தெம்புல குறைச்சல் இல்லை. உரல்ல இடிச்சு வேலை செய்றதால எங்க ஊர் பொம்பளைக யாருக்கும் ஊளைச்சதை (கொழுப்பு) இருக்காது. ரத்தக் கொதிப்பு, சர்க்கரைனு எந்த சீக்கும் இல்லாம எங்க ஊரு மக்க மனுசங்க திடகாத்திரமா இருக்கிறாங்க” என்றார்.
அம்மியில் அரைச்சாத்தான் ருசி!
அம்மியில் மசால் அரைத்துக் கொண்டிருந்த அமராவதி, புகைப்படம் எடுப்பதைப் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டே, “மசால், துவையல் எல்லாம் கிரைண்டர், மிக்சியில அரைச்சா ருசியாவே இருக்காது. அம்மியில மசால் அரைச்சு கறிக்குழம்பு வெச்சா… வாசம் ஊரையே தூக்கும். எங்க மிக்சிக்கு… அதாங்க அம்மிக்கு, கரன்ட்டே தேவையில்லை. ஆயுசுக்கும் ரிப்பேர் ஆகாது. வருஷத்துக்கு ஒரு தடவையோ, ஆறு மாசத்துக்கு ஒரு தடவையோ கொத்தி விட்டா போதும். சுளுவா வேலை நடக்கும். மிக்ஸியில அரைச்சா, சாப்பிட்ட திருப்தியே இருக்காது. அம்மியில அரைச்சா… திருப்தி மட்டுமில்ல, ஆரோக்கியமும் சேர்ந்தே கிடைக்கும்” என்றார் உண்மை உணர்ந்தவராக.
மர உரல்!
தேனி மாவட்டம், சோத்துப்பாறை போகும் வழியில், உள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் சொக்கன் அலை என்ற கிராமத்தில் மர உரல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. அது குறித்துப் பேசிய காமாட்சி, “இது முப்பாட்டன் காலத்துல இருந்து இருக்குது. தினை, கேப்பை, காபிக்கொட்டை எல்லாத்தையும் இதுலதான் இடிப்போம். காட்டுல இடம் மாறி மாறி தங்குறப்ப தூக்கிட்டுப் போக தோதா இருக்குங்கிறதால, மரத்துல உரல் செஞ்சிருக்காங்க எங்க முன்னோருங்க. இன்னும் அந்த வழக்கம் தொடருது. நல்லா விளைஞ்ச காட்டுக் குமிழ் மரத்தை குடைஞ்சுதான் இந்த உரலை செய்வாங்க. அதே மரத்தோட கட்டையைத்தான் உலக்கையாவும் பயன்படுத்துவோம். கல் உரல்ல குத்தும்போது தானியங்கள் மாவு மாதிரி ஆகிடும். ஆனா, மர உரல்ல முழுசா உடையாம குருணை குருணையா இருக்கும். இதுல கூழ், கஞ்சி காய்ச்சி குடிச்சா அம்புட்டு ருசியா இருக்கும். உடம்புக்கும் தெம்பா இருக்கும்” என்றார்.
ஆஹா… ஆட்டுக்கல்!
“அப்பு, காலத்துக்கும் இதுதான் நிரந்தரம். நான் வாக்கப்பட்டது, பெரிய குடும்பம். இப்ப ஒரு கறிக்குழம்பே வெக்குறோம்னு வையி, ஒரு ஆளு உப்பு குறைச்சலா கேப்பாங்க. ஒரு ஆளு உரைப்பா கேப்பாங்க. இப்படி ஆளுக்கு ஒரு தினுசா கேப்பாங்க. அத்தனை பேர் விருப்பத்தையும் நிறைவேத்தணும்னா மிக்சியில ஆட்டி முடியாது. அம்மியில கை பக்குவமா, தேவையான பதத்துல ஆட்டி குழம்பு வெச்சாத்தான் சரிக்கட்ட முடியும். இதுல வெக்கிற குழம்பு ருசிக்கு ஈடு இணையே இல்லப்பு. டவுன்ல இட்லி, தோசைக்கெல்லாம் இப்ப ரெடிமேட் மாவு விக்கிறாங்க.
மனுச மக்கள்ல்லாம், சோம்பேறியாயிட்டு வர்றாங்க. கேட்டா, புருஷன், பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். மாவு ஆட்டுறதுக்கெல்லாம் நேரமில்லைனு சொல்றாங்க. பட்டிக்காட்டுலயும் ரெண்டு பேரும்தான் காட்டு வேலைக்குப் போறாங்க. நாள் முழுக்க வெயில்ல இருக்கிறாங்க. ஆனாலும், அம்மில அரைக்குறது, மாவாட்டறதுனு வீட்டு வேலைகளையும் சுறுசுறுப்பா செய்றதாலதான் இங்க ஆரோக்கியமா இருக்கோம். டவுனுகாரங்க ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க” என்று ஆதங்கப்பட்டார்.
இன்னமும் பழமை மாறாமல், ஆரோக்கியத்துடன் இருக்கும் இதுபோன்ற கிராமங்கள்தான், முன்னோர் வகுத்துக் கொடுத்த இயற்கை வாழ்வியல் முறைக்கு உயிர்சாட்சிகள்!
உரல் வரலாறு!
‘பழங்காலத்தில் விளைபொருட்களை, உணவுப்பொருளாக மாற்ற, பாறைகளில் சிறிய குழிகளை உருவாக்கி, அதில் நீளமான தடியைப் பயன்படுத்தி இடித்தார்கள். காலபோக்கில் பாறைகளில் இருந்து கற்களை வெட்டி எடுத்து, தனியாக உரல் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டதுடன்… உறுதியான மரங்களில் இருந்து உலக்கைகள் தயாரித்துப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்’ என்கிறார்கள், வரலாற்று ஆசிரியர்கள்.
தேக்கு, மருதமரம், கடம்பமரம் ஆகிய உறுதியான மரங்களில்தான் உலக்கை செய்யப்படுகிறது. நுனியில் பிளவு ஏற்படாமல் இருக்க பூண் பூட்டி இருப்பார்கள். மஞ்சள், மிளகாய் ஆகியவற்றை இடிக்கும் உலக்கையில் பூண் இருக்காது. இதை ‘கழுந்துலக்கை’ என்பார்கள்.