எந்த எண்ணெய் நல்ல’ எண்ணெய்?

      நவீன உலகத்தில் பளபளப்பவை எல்லாமே நன்மை என நினைத்துக்கொண்டிருக்கும் போது, எண்ணெய் மட்டும் விதிவிலக்கா என்ன? நீரின்றி அமையாது உலகு என்பதுபோல எண்ணெயின்றி அமையாது உணவு என்று சொல்வது  பொருத்தமானதுதான்!

     ஒரு படத்தில் எண்ணெய் வேண்டுமென்று கேட்டு கடைக்காரனிடம் ரகளை செய்வார் வடிவேலு. கடலை எண்ணெய் கேட்டு இது நல்ல எண்ணெயா.. அதாவது சுத்தமான  கடலை எண்ணெயா  என்று கேட்டு அதகளப்படுத்தும் காட்சி தெறிக்கத்தெறிக்கச் சிரிக்க வைத்துவிடும். கூடவே… சிந்திக்கவும்தான்!

    செக்குமாடு மாதிரி சுத்தி சுத்தி வர்றீயே என்பார்கள் பெரியவர்கள். முன்பெல்லாம் எண்ணெய் தயாரிப்பில் பிரதானமே செக்குதான். மாடுகள்தான். பெரிய கல் உரலில் வாகை மரத்தால் ஆன செக்கைப் பூட்டுவார்கள். மாட்டை செக்கின் முனையில் கட்டிச் சுற்றி வரச் செய்வார்கள். மாடு சுற்றும்போது செக்கும் சுற்றும். இப்படித்தான், எண்ணெயைப் பிழிந்து எடுப்பார்கள். இப்படி எடுக்கப்பட்ட எண்ணெய்கள்  எல்லாமே உடலுக்கு நன்மை தரும் நல்ல எண்ணெய்களாக சுத்தமானதாக இருந்தன.   

   எண்ணெய்  இல்லாமல் உணவில்லை.  நல்ல எண்ணெய் இல்லாமல் வாழ்க்கையில் வளமில்லை என்பதை உணர்ந்திருந்த முன்னோர்கள், நிலக்கடலையிலிருந்து கடலை எண்ணெய்… கறுப்பு எள்ளிலிருந்து நல்லெண்ணெய், தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய்…, முத்துக்கொட்டையிலிருந்து விளக் கெண்ணெய், அரிசித் தவிட்டிலிருந்து தவிட்டு எண்ணெய்… கடுகிலிருந்து கடுகு எண்ணெய் எனத் தயாரித்தார்கள்.

    பொரிக்கவும், வறுக்கவும், கடலை எண்ணெய். தாளிக்க, சமைக்க.. உடல் தேஜஸைப் பொலிவாக்க.. எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய். வாய்ப்புண், வயிற்றுப்புண் சில குறிப்பிட்ட சமையலில் சுவைக்கு தேங்காய் எண்ணெய். உடல் உஷ்ணத்தைத் தணிக்கவும்.. உடலில் உள்ள அழுக்கை நீக்கவும் உள்ளுக்கு விளக்கெண்ணெய் என எந்த விஞ்ஞானமும் மருத்துவர்களும் சொல்லாமலேயே  அனைத்து எண்ணெய்களையும்  தக்க சமயத்தில் பயன்படுத்தி உடலில்  நல்ல கொழுப்புகளையும் தக்கவைத்துக் கொண்டார்கள். 

விளம்பரங்கள்:

    செக்கு முறையில் ஆட்டப்பட்ட எண்ணெய்களைத் தவிர்த்து ரீபைண்ட் எண்ணெய்களே இதயத்துக்கு வலுசேர்க்கின்றன என்று தவறான  தகவல்கள் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு வந்திருக்கின்றன. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள் மாரடைப்பு, ரத்த அழுத்தத்தை உண்டாக்குகின்றன என்று தவறாக மக்களின் கவனத்தைத் திசை திருப்பினார்கள்.

இந்தசமயத்தில்தான், போதாக்குறைக்கு இதய நோயை அண்டவிடாது, ரத்த அழுத்தமே வராது,  நாள்முழுக்க உற்சாகத்துடன் வைத்திருக்கும் என்கிற ரீதியில் வருகிற அழகிய விளம்பரங்களைக் கண்டு மக்கள் ரீபைண்ட் ஆயில்,  டபுள் ரீபைண்ட் ஆயில் என்று  மாறினார்கள்.

ஆரம்பத்தில் புழக்கத்தில் வந்த சூரிய காந்தி எண்ணெய் போன்று நாளடைவில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தவிட்டு எண்ணெய் எல்லாமே பளபளவென்று மின்னும் பாக்கெட்டுகளில் பளீர்  நிறத்துடன் மெல்லிய அடர்த்தியைக் கொண்டு சுத்தமான எண்ணெயாக விற்பனைக்கு வந்தன.

கலப்பட ரீபைண்ட் ஆயில் 

  சூரிய காந்தி எண்ணெய் உடலுக்கு நன்மையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் விதைகள் குறைந்த கொழுப்புச்சத்தைக் கொண்டவை.  இதயத்தில் எவ்வித அடைப்பும்  உண்டாக்காது. ஆனால் சூரியகாந்தி எண்ணெய் எல்லாமே சூரியகாந்திப் பூக்களில் இருந்து மட்டுமே பெறப்படுவ தில்லை. மாறாக பல ஆயில்களின் கலப்படமாக  இருக்கிறது. சூரியகாந்தி எண்ணெய் உடலுக்கு மிக நல்லது என்று வலியுறுத்தும்  எண்ணெய் நிறுவனங்கள் சூரியகாந்தியின் உற்பத்தி அளவை சொல்வதில்லை. காரணம் சூரியகாந்தி எண்ணெயின்  உற்பத்தியை விட மிகக் குறைந்த அளவே சூரிய காந்தி பூக்கள் பயிரிடப்படுகின்றன. இதை ஆய்வுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கலப்படமிக்க எண்ணெய் என்பது ஒருபுறம் இருக்கட்டும் இதை தயாரிக்கும் முறைகளுமே ஆரோக்கியத்தைக் குறைத்து, கேடு தரும் என்பதே கசப்பான உண்மை. வேதிப்பொருள்கள் கலக்கப்பட்டு  சுத்திகரிக்கப்படும் ரீபைண்ட் எண்ணெயின் நிறம், வழவழப்புத்தன்மையை நீக்குவதற்கு  காஸ்டிக் சோடா, கந்தக அமிலம், ப்ளீச்சிங் பவுடர் என உபயோகப்படுத்துகிறார்கள். இந்த வேதிப் பொருள்கள் நீக்கப்பட்ட பிறகே பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு  வருகின்றன என்றாலும் முழுமையாக நீங்காமல் குறிப்பிட்ட சில சதவீதம் அந்த எண்ணெயில் அப்படியே தங்கிவிடுகின்றன. உடலை பாதிக்காத வகையில் குறைந்த அளவு என்றாலும் தொடர்ந்து  இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தும்போது அவை உடலில் இருக்கும் சத்துக்களை வலுவிலக்கச் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

அதாவது, ஒரு துளி விஷத்தை ஆயிரமாகப் பிரித்து ஒரு பகுதியைச் சாப்பிட்டால்  உடம்பை ஒன்றும் செய்யாது என்பது உண்மைதான்,. ஆனால் அன்றாடம் சேரும்போது நஞ்சாக மாறிவிடாதா. மேலும்  சூரியகாந்தி எண்ணெயுடன் குருடாயில் பாமாயிலும் உடலுக்கு நன்மை தருவதல்ல. வனஸ்பதி போன்று இதுவும் உடலுக்கு கெடுதல் தரக்கூடியதுதான்!

  பாக்கெட்டில் வரும் நல்லெண்ணெய்களும் நல்ல எண்ணெயா என்றால் இதிலும் வேறுபாடு உண்டு. இயற்கை முறையில் ஆட்டும்பொது   எள்ளிலிருந்து எண்ணெய் பிழிய கருப்பட்டியைச் சேர்ப்பார்கள். ஆனால் நவீன முறையில் இயந்திரங்கள் முறையில் பிழியப்படும் எண்ணெயில்  சர்க்கரை ஆலையில் இருந்து பெறப்படும் கழிவைப் பயன்படுத்துகிறார்கள். இவை எண்ணெயின்  சத்துக்களையும் சேர்த்தே வடிகட்டிவிடுகின்றன.  ரீபைண்ட் ஆயில் உபயோகிக்காமல் மார்க்கெட்டில் புழக்கத்தில் இருக்கும் இவையும் நல்ல எண்ணெய் கிடையாது. ஆக இவற்றைத் தொடர்ந்து உபயோகப்படுத்தினால்  உடலின்  ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்!

  அடர்த்தி குறைந்த இந்த எண்ணெயை நாம் பயன்படுத்தும் பாத்திரங்களைக்   கவனித்தால் தெரியும்.. பாத்திரங்களில் பிசுபிசுப்பாக  ஒட்டியிருக்கும் அழுக்குகள் உருண்டை  வடிவில்  இருக்கும். ஆனால் இயற்கை முறையில் செக்கில் ஆட்டப்படும் எண்ணெயில் அழுக்குகள் அறவே இருக்காது.

நல்ல எண்ணெய் உடலுக்குத் தேவை:

 ஒருவர் அன்றாட உணவில் 15 மி.லி. வரையான எண்ணெயை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  தாவரக் கொழுப்பு, மாமிசக்கொழுப்பு எனும் இரண்டு வகைகளில் தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் என்பது தாவரக் கொழுப்பு.  இந்தக் கொழுப்பில் அமிலத்தன்மை கொண்டிருப்பதால் இது அமிலக் கொழுப்பு என்று அழைக்கப் படுகிறது. உடலில்  ரத்தத்தில் எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பைக் குறைத்து எச்டிஎல் என்னும் நல்ல கொழுப்பை உருவாக்குவதே நல்ல சமையல் எண்ணெய் என்கிறது உலக சுகாதார அமைப்பு. மாறாக கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் ரத்தத்தில் கொழுப்பை அதிகரித்து, இதய நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் என்பதுடன் மேலும் புற்றுநோயை உண்டாக்கும் அளவுக்குக்  கூட அபாயத்தை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் ஊட்டச்சத்து  மருத்துவ நிபுணர்கள்.

 செறிவுற்ற கொழுப்பு அமிலம், செறிவுறா கொழுப்பு அமிலம் என இரண்டு வகைப்படும் அமிலங்களில் செறிவுறா அமிலங்களும் ஒற்றை செறிவுறா கொழுப்பு  அமிலம் மற்றும் பன்முகச் செறிவுறா அமிலம் என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. இவை இரண்டுமே  ரத்தத்தில் எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து  மாரடைப்பு உருவாவதைத் தடுக்கிறது.

  நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றில் இத்தகைய அமிலம்  அதிகமாகவே இருக்கிறது. நல்ல எண்ணெய் என்பது  செறிவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை செறிவுறா  கொழுப்பு அமிலம், பன்முக செறிவுறா கொழுப்பு அமிலம் என இவை மூன்றுமே நாம் உபயோகப்படுத்தும் எண்ணெயில் சரிவிகிதமாக கலந்திருக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவுறுத்துகிறது, ஆனால் இவையெல்லாம் எந்த எண்ணெயிலும் இல்லை என்றாலும் சுத்தமான கலப்படமில்லாத சூரிய காந்தி எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய்,  சோயா மற்றும் ஆலிவ் எண்ணெய்களில்  இவை பரவாயில்லாமல் இருக் கின்றன.

நல்ல எண்ணெய் எது?

  இன்றும்  மிகக் குறைந்த இடத்தில்  நிலச்சுவான்தாரர்கள் செக்குமாடு கொண்டு எண்ணெயைத் தயாரிக்கிறார்கள். தற்போது  இயற்கை முறையில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துங்கள் என்று ஒரு சாராரும், கடலை எண்ணெய் சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்று மறுசாராரும் கூறுகிறார்கள்.

இயற்கை முறையில் செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் செக்கு மாடுகள் இல்லாத வாகை மரத்தால் செய்யப்பட்ட செக்கில் மின்சார உதவியுடன் இயக்கப்படுகின்றன. கறுப்பு எள்ளை வாங்கி சுத்தம் செய்து கழுவி காயவைத்து   10 கிலோவுக்கு  ஒன்றரை முதல் 2 கிலோ வரை கருப்பட்டி கலந்து ஆட்டப்படும் எண்ணெயை பானை அல்லது டின்களின் அடைத்து ஒருவருடம் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.

 நம் முன்னோர்கள் நல்லெண்ணெயை காது, கண்களில் விட்டு கட்டுவார்கள். இதற்கு எண்ணெய் கட்டுதல் என்று பெயர். உடல் உஷ்ணம் நீங்க, கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேற உடல் சருமம் மினுமினுக்க  நல்லெண்ணெய்க்  குளியலை வாரம் தோறும்  கடைப்பிடித்தார்கள். இதேபோன்று தேங்காயை உலர்த்தி பூஞ்சையில்லாமல் ஆட்டப்படும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை  மரச்செக்கில் ஆட்டும்போது  உயிர்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும். 35 டிகிரி வெப்பத்தில்  ஆட்டும் போது சத்துக்கள் அழியாமல் பாதுகாக்கப்படும். அதனால் ருசியும் வாசமும் நிறைந்திருக்கும். நிறம் பளபளக்காமல் பழுப்பு நிறத்தில் அடர்ந்தியாக இருக்கும். அதனால்  சமையல் செய்யும்போது குறைந்த அளவு எண்ணெயே  செலவாகும்.  ஆரோக்கியம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் இத்தகைய எண்ணெய் வகைகள் விலை சற்று அதிகம்தான்.

மருத்துவர்களும், ஊட்டச்சத்து உணவு நிபுணர்களும் வலியுறுத்துவது இதைத்தான்… எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிருங்கள். செக்கிலிருந்து ஆட்டிய எ’ண்ணெய் என்றாலும் அளவுக்கு மீறி  சேர்க்காதீர்கள். குறிப்பிட்ட  எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தாமல் அனைத்து எண்ணெய்களையும் பயன்படுத்துங்கள்!

எந்த எண்ணெயாக இருந்தாலும் நல்ல எண்ணெய்தானா என்று அறிந்து வாங்குங்கள்.

ஆரோக்கியம் காப்பதும் முக்கியம்; அதைக் குறைக்காமல் பாதுகாப்பது அதைவிட முக்கியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.