குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா?
பாதுகாப்பாக இருக்கும் என நம்பி ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவே நஞ்சானால் என்ன செய்வது? ஒரு காலத்தில் ஆடம்பரத் தேவையாக இருந்த ஃப்ரிட்ஜ் பிறகு மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியது. இன்றோ மீதமான உணவுகளைப் பாதுகாக்கிற கிடங்காகவே அதை மாற்றிவிட்டார்கள்.
வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் உணவு கள் உண்மையில் ஆரோக்கியமானவை தானா? எந்தந்த உணவுப்பொருட்களை எத்தனை நாள் வைக்க வேண்டும்? குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் வாணி விஜய்யிடம் கேட்டோம்…“40 டிகிரி முதல் 140 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்தான் உணவில் பாக்டீரியா போன்ற கிருமிகள் வளரும்.
அதைத் தவிர்த்து உணவுகளை பதப்படுத்தி வைக்கவே ஃப்ரிட்ஜை கண்டுபிடித்தார்கள். 1980களில்தான் நடுத்தர குடும்பங்களும் பயன்படுத்தும் விலையில் ஃப்ரிட்ஜ்கள் கிடைக்க ஆரம்பித்தன. சமைத்த உணவுப்பொருட்கள் மீதமானால், அவற்றைப் பாதுகாத்து அடுத்த நாள் பயன்படுத்த ஃப்ரிட்ஜ் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இன்றைய நிலையில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஃப்ரிட்ஜில் பொதுவாக 3 அடுக்குகள் உள்ளன. ஃப்ரீசர் என்னும் மேலடுக்கில் மாமிச உணவுகளான மட்டன், சிக்கன், மீன் ஆகியவற்றை ஒரு மாதம் வரை பாதுகாக்கலாம். ஆனால், வெளியே எடுத்தால் உடனடியாக சமைத்து விடுவதே நல்லது. இந்த அடுக்கில் 0 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு கீழே வெப்பநிலை இருப்பதால், வைக்கும் பொருட்கள் உறைபனி நிலையில் இருக்கும். மாமிச உணவுகளை வெளியே எடுத்து நன்றாக கழுவி சமைக்க வேண்டும்.
அதற்கு அடுத்து உள்ள அடுக்குகளில் சமைத்த உணவுகளை வைக்கலாம். இந்த அடுக்கில் ஒரு டிகிரி முதல் 2 டிகிரி ஃபாரன்ஹீட் வரையே வெப்பநிலை இருக்கும். கீழ் உள்ள அடுக்குகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதற்கென உள்ள பெட்டிகளில் போட்டு வைக்க வேண்டும். பழச்சாறுகள், சாஸ், முட்டை, டின் உணவுகள், சாக்லெட் ஆகியவற்றை பக்கவாட்டு அடுக்கில் வைக்க வேண்டும். இந்த அடுக்குகளின் வெப்பநிலை 3 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவாக இருக்கும்.
காய்கறிகள், பழங்களை நன்றாக கழுவி காற்று புகக்கூடிய பேக்கில் போட்டு அதற்குரிய பெட்டிகளில் அடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை பிரத்யேகமான கூடைகள், ஜிப்லாக் கவர்களில் வைப்பது பாதுகாப்பானது.
உணவுகளை தேவையான அளவு பயன்படுத்தி விட்டு மீதத்தை வைத்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது தான் பிரிட்ஜ். ஆனால் இன்றைக்கு பலர் இதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். காரணம் ஒருநாள் சமைத்து அதனை பிரிட்ஜில் வைத்து பலநாட்கள் சாப்பிடுவது தான். இதனால் நமக்கு பலவகையான நோய்களை நமது உடலில் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட உணவுகள் விஷமாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக பிரிட்ஜில் இட்லி மாவு, இறைச்சி, காய்கறிகளை பிரிட்ஜில் வைக்க கூடாது. இதனால் பல உபாதைகள் நம் உடலில் ஏற்பட வாய்ப்புள்ளதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள். அதனால் காய்கறிகளை வெளியே வைத்து உபயோகிப்பது மிகவும் நல்லது.
பாக்கெட்களில், பாட்டில்களில் வரும் ஊறுகாய், சாஸ்கள், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தாலும், எக்ஸ்பயரி தேதி பார்த்து
உபயோகிப்பதே நல்லது. 3 மாதம் வரை பயன்படுத்தலாம் என போட்டிருக்கும். ஆனால், பேக்கிங்கை பிரித்த பின் ஒரு வாரம்தான் பயன்படுத்தலாம் என்றும் போட்டிருப்பார்கள். இதையெல்லாம் கவனித்தே பயன்படுத்த வேண்டும். பேக்கிங்கை பிரித்த பின் 3 மாதங்கள் வரை பயன்படுத்தினால், அது நமது உடலுக்கு நஞ்சாகிவிடும்.
சில உணவுப்பொருட்கள் காற்று புகாத பேக்கில் வரும். இந்த வகை பேக்கை பிரித்து விட்டு மூடினாலும் பாக்டீரியா பரவ வாய்ப்புண்டு. பிரித்து உபயோகித்த உடனே இறுக்கமாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.`லிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ்’ என்ற பாக்டீரியாதான் உணவை கெட வைத்து விஷமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெரப்டோகாக்கஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆகிய பாக்டீரியாக்களும் தன் பங்குக்கு உணவுகளை கெட்டுப்போகச் செய்கின்றன.
இந்த பாக்டீரியாக்கள் அனைத்தும் திறந்த உணவுகளின் மீதுதான் காற்றின் மூலம் வளருகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் உள்ள பொருட்களில்தான் இந்த பாக்டீரியாக்களால் வளர முடியும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குறைவான வெப்பநிலையால், அங்கு இந்த பாக்டீரியாக்களால் பரவ முடியாது. உணவும் கெட்டுபோகாமல் சில நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்.
நட்சத்திர ஹோட்டல்களுக்கான மட்டன், மீன், இறால் போன்றவை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்
படுகிறது. இது எப்படி சாத்தியம்? அங்கே அந்த மாமிசங்களை வெட்டி சுத்தப்படுத்தி 0 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் ஃப்ரீசரில் பாதுகாத்து அனுப்புவார்கள். இங்கே வந்ததும் அதை ஹோட்டலில் உள்ள ஃப்ரோஸன் பகுதியில் (Frozen zone) வைத்துவிடுவார்கள். மாமிசத்தை தண்ணீரில் சுத்தப்படுத்தி சமைப்பார்கள். இப்படி பாதுகாக்கப்படும் உணவுகள் 2 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும். கிருமிகளால் இந்த வெப்பநிலையில் வளர முடியாததே இதற்குக் காரணம்.
ஆனால், கடைகளில் ஃப்ரோஸன் உணவுப்பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி மின்சாரம் போகும் கடைகளில் இவ்வகை உணவுப்பொருட்களை வாங்கக்கூடாது. திங்கட்கிழமை முழுவதும் கடையில் மின்சாரம் இல்லை. அந்தக் கடையில் ஜெனரேட்டரும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய்க் கிழமை அந்தக் கடைக்கு சென்று ஃப்ரோஸன் பேக்கில் உள்ள ஏற்கனவே சமைத்த சிக்கனை வாங்கினால், கண்டிப்பாக அதில் பாக்டீரியாக்கள் பரவியிருக்க வாய்ப்புண்டு. அதை வாங்கி வந்து நமது வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சமைத்து சாப்பிட்டால் புட்
பாய்ஸன் ஆக வாய்ப்புகள் அதிகம்.
ஒரு உணவு கெட்டிருக்கிறது என்பதை அதன் தோற்றம், அதில் இருந்து வரும் நாற்றத்தை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். சுவைத்துப் பார்க்கக்கூடாது. அது விஷத்தை வலிய சாப்பிடுவதற்கு சமம். இரண்டு நாள் ஃப்ரிட்ஜில் வைத்த சட்னியில் லேசான நாற்றம் இருந்தாலும், ‘சாப்பிட்டுப் பார்ப்போமே’ என தோசையை சட்னியில் தொட்டு வாயில் வைத்து சுவைத்துப் பார்ப்பார்கள். இப்படிச் செய்வது விபரீத விளையாட்டாகும். கெட்டுப் போயிருக்கிறது என சந்தேகம் வந்தாலே உணவை குப்பையில் போட்டுவிடுங்கள். இல்லையெனில் உங்கள் வயிறு குப்பைத் தொட்டியாகிவிடும்.
வாரக்கணக்கில் காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் அடைத்து வைக்கக்கூடாது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், மனைவி ஒருநாள் சமைத்தால் கணவன் ஒருநாள் சமைக்கலாம். சமைக்கத் தெரியாவிட்டால் காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தாவது உதவலாம். இதுபோல பகிர்ந்துகொண்டால் சமையல் பொருட்களை ஃப்ரிட்ஜில் பாதுகாத்து வைக்கத் தேவையிருக்காது.
ஃப்ரிட்ஜில் பாலை வைத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தயிர், மோர் ஆகியவற்றை அன்றன்றே பயன்படுத்துவது நல்லது.
மாமிச உணவுகளை ஃப்ரீசரில் வைக்கும் போது நன்றாகக் கழுவி, அலுமினியம் பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும். சிலர் மீனை வெட்டி மசாலா, மஞ்சள்பொடி தடவி அதை ஃப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள். அடுத்த நாள் எடுத்து பொரிப்பார்கள். இது உண்மையில் சிறந்த முறை. மஞ்சள் பொடியும் மசாலாவும் பிரிசர்வேட்டிவ் ஆகச் செயல்பட்டு மீனை அதே சுவையுடன் ஃப்ரெஷ்ஷாக வைக்கும்.
ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடக்கூடாது. ஃப்ரிட்ஜை சரியாக மூட வேண்டும். இல்லாவிட்டால், பூச்சிகள் புகுந்துவிடும். இதனாலும் உணவு
நஞ்சாகலாம். ஏதாவது ஒரு உணவுப்பொருள் மற்ற உணவுடன் கலந்தாலோ அல்லது அதன் மேல் சிந்தினாலோ அதை பயன்படுத்தாமல் வெளியே எடுத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும்.
டப்பாக்களை வெளியே எடுத்து சுத்தமாக கழுவி உலர்த்தி உள்ளே வைக்க வேண்டும். சிலர் ஃப்ரிட்ஜில் இருந்து முட்டைநாற்றம் வரும் வரை கழுவ மாட்டார்கள். நாற்றம் வந்தால் அந்தப் பொருட்களை உடனடியாக ஃப்ரிட்ஜில் இருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும். மின்சாரம் போய்விட்ட நாளன்று, ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட வேண்டும்.
Immunocompromised persons என்னும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்கள், ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள் பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது. ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்…’’
கடைகளில் ஃப்ரோஸன் உணவுப் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.