இட்லி, தோசை இல்லாத ஒரு நாளையோ, உளுந்து வடை இல்லாத விசேஷ நாட்களையோ நினைத்துப் பார்க்க முடியுமா? இந்த மூன்றுக்கும் அடிப்படை உளுந்து. இந்தப் பண்டங்கள் அனைத்தும் கோயில் பிரசாதமாக முதலில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக உளுந்து எனப்பட்டாலும், தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. நீள்உருளை வடிவத்தில், பளபளப்பாக இருக்கும் இது தனி நறுமணம் அற்றது. அதேநேரம் மண் வாசம் அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் – அதிகம் பயன்படுத்தப்படும் பயறு வகை இதுவே. பஞ்சாபி உணவு வகையிலும் இது மிகவும் பிரபலம்.
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.
பயன்பாடு
கறுப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது. இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது. வடஇந்தியாவில் தால் மக்கானிக்கு இதுவே அடிப்படை. வெங்காயம், பூண்டுடன் சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாகச் சாப்பிடப்படுவதும் உண்டு. அதேபோல, பச்சை உளுந்தை மாவாக்கித் தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், உடல் வலிமை பெறும்.
ஊட்டச்சத்து
இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும்.
# முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது.
# நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
# உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.
# செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.
# கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.
தெரியுமா?
இந்தியாவின் பல பகுதிகளில் உளுந்துத் தட்டை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மாதவிடாய் வலி நீக்கும் வெள்ளை உளுந்து
வெள்ளை உளுந்துதான் தற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இட்லி, தோசை, வடை போன்றவை வெள்ளையாக இருக்க வேண்டுமென்று உணவகங்கள் நினைத்த காரணத்தால், வெள்ளை உளுந்து பிரபலமாகி இருக்கலாம்.
பயன்பாடு
அரிசியோடு சேர்த்து மாவாக அரைக்கப்பட்டு இட்லி தோசைக்கும், தனியாக அரைக்கப்பட்டு வடைக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மங்கள நிகழ்வுகளில் ’உளுத்தஞ்சோறு’ நெடுங்காலமாக இடம்பெற்றுவருவதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிடச் சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும் இருக்கின்றன.
ஊட்டச்சத்து
# இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
# உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.
# தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். மலத்தை வெளித் தள்ளவும் உதவுகிறது.
# தோல் நீக்கப்பட்ட உளுந்து, பாலுணர்வைத் தூண்டக்கூடியதாகக் கருதப்படுகிறது.
இதை அதிகமாகச் சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் இதில் ஆக்சாலிக் அமிலம் இருப்பதால், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
மெலிந்த உடலைப் பருக்கச் செய்ய உளுத்தங் கஞ்சி சிறந்த உணவு.
# சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.
# தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். ‘எலும்புருக்கி’ நோய் தீரும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சித்தர் அகத்தியர்.
# உளுந்து மூலம் செய்யப்படும் உளுந்துத் தைலம், சித்த மருத்துவத்தில் வாத நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. வலிமை இழந்த தசைக்கு வலுவூட்ட உளுந்துத் தைலம் உதவுகிறது. தொக்கண முறைகளில் அதிக அளவில் உளுந்துத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.
# முளைகட்டிய உளுந்து மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
# எலும்பு முறிவிற்கு தண்ணீரில் ஊற வைத்து, காய வைத்து,அரைத்த கறுப்பு உளுந்து மாவு முட்டை வெண்கரு இட்டு குழைத்து துணி சுற்றி கட்டுதல் சித்த மருத்துவ வழிமுறை